புதுடெல்லி: பிஎப் பென்ஷன்தாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பிஎப் பென்ஷன் பெறும் சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர். இந்த பென்ஷன் தொகை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும். இந்த குறைந்த பட்ச பென்ஷனை வழங்குவதற்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.1,217 கோடி வழங்கும்.
தற்போதுள்ள பிஎப் திட்டத்தின்படி, தொழிலாளரின் குறைந்த பட்ச ஊதியம் வரம்பு ரூ.6,500 இருக்கிறது. இந்த ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்த தொழிலாளர் நலத் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் ஏற்று ஒப்புதல் அளித்த பிறகுதான் அமலுக்கு வரும். இந்த ஊதிய உச்சவரம்பை உயர்த்தியதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.