நேர்மையான பணியால் 'ஹாட்ரிக்' விருது: திருச்சி கலெக்டருக்கு குவியும் பாராட்டு - தினமலர் செய்தி


 நேர்மையான பணியாலும், பாரபட்சமில்லா நடவடிக்கையாலும், நிர்வாகத் திறமையாலும், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீக்கு, தொடர்ந்து மூன்று முறை, தமிழக அரசின் சிறந்த கலெக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, பல சமூக நல அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், பாராட்டு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஜூன் மாதம், திருச்சி மாவட்ட கலெக்டராக, ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, மாவட்ட நிர்வாகத்தில், பல வளர்ச்சி பணிகளைச் செய்துள்ளார்; மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் மரக்கன்று நடும் திட்டத்தை தீவிரப்படுத்த, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், 1.60 லட்சம் மரக்கன்றுகள் நட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விஞ்சி, 2.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல, நடப்பாண்டு, 2 லட்சம் என்ற இலக்கை விஞ்சி, 8.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மத்திய, மாநில விருதுகள் முதல்வர் தனிப்பிரிவு மனு மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்காக, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், மூன்று முறை தொடர்ந்து, 'ஹாட்ரிக்' விருது பெற்றுள்ளார். இதற்கிடையே, 100 நாள் வேலை திட்டத்தில், ஆவணங்களை முறையாக பராமரித்ததற்காக, பிரதமர் மன்மோகன் கையால், மத்திய அரசின் விருது கிடைத்தது.

மேடையை நிராகரித்த கலெக்டர்:

திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கஷ்டப்பட்டு, மேடை ஏறி வந்து தான், மனு அளிப்பர். மாற்றுத் திறனாளிகள் கஷ்டப்படுவதைக் கண்ட கலெக்டர், பதவியேற்ற சில நாட்களிலேயே, மாற்றுத் திறனாளிகளுக்காக, கீழே அமர்ந்து மனு பெறுவதாகக் கூறினார். அரசு அதிகாரிகள், ஊழியர்களில் தவறு செய்பவர்கள் இருப்பர் என்பதை நன்கு உணர்ந்த கலெக்டர் ஜெயஸ்ரீ, தனக்கு கீழ் பணியாற்றுபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவ்வப்போது அவர்களுக்கு அறிவுறுத்துவார். மீறி யாராவது தவறு செய்தால், அவர்களை பதவி, பணியிலிருந்து தூக்கியடிக்க, சிறிதும் தயங்கமாட்டார். யார் மீது புகார் வந்தாலும், கடும் எச்சரிக்கை விடும் கலெக்டர், புகாரில் உண்மைத்தன்மை இருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது இல்லை. சாதாரண மக்கள், தங்கள் மாவட்ட கலெக்டரைச் சந்திப்பது, எளிதான காரியமில்லை. ஆனால், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயை, எப்போதும் பொதுமக்கள் சந்திக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை கண்டால், உற்சாகமாகும் கலெக்டர், நற்சிந்தனையை தூண்டும் வகையில், அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்; பல இடங்களில், பாடமும் நடத்தியுள்ளார். திருச்சி மத்திய மண்டலத் தில் உள்ள, எட்டு மாவட்டங்களில், இவருடன், கலெக்டர்களாக நியமிக்கப்பட்ட பலரும், மாற்றப்பட்ட நிலையில், இவர் மட்டுமே, தொடர்ந்து, திருச்சி கலெக்டராக பணியில் உள்ளார். இதற்கு திருச்சி மாவட்ட பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

சீனிவாசன் ஒப்புதல்:

திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த, சீனிவாசன் என்பவருக்கு, தகவல் உரிமை சட்டத்தில், 2,000 பக்கங்கள் வெற்றுத் தாள்களாக கொடுத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள், முறையாக நடந்து கொள்ளவில்லை. இதை அந்த சீனிவாசனே ஒப்புக் கொள்கிறார். அவர் கூறுகையில், "என்னுடைய விஷயத்தில், கலெக்டர் கறாராக தான் நடந்து கொண் டார். ஆனால், அவருக்கு கீழுள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், அவருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. ஊழல் மற்றும் அலட்சிய அதிகாரிகள் பட்டியலில், கலெக்டர் ஜெயஸ்ரீ பெயரை சேர்க்க வேண்டாம் என, கூறினேன். ஆனால், தமிழ் மீட்சி இயக்கத்தினர் அதை ஏற்கவில்லை,” என்றார்.

நேர்மையானவர்கள் பெயர் ஊழல் பட்டியலில் இடம்பெற்றது ஏன்? ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் என்பதன் அடிப்படையில், 'தமிழர் மீட்சி இயக்கம்' என்ற தன்னார்வ அமைப்பு, நேற்று முன்தினம், வெளியிட்ட பட்டியல் தவறானது என, தெரிய வந்துள்ளது. 'இந்த பட்டியல், நேர்மையான அதிகாரிகளை இழிவுபடுத்துவதாக உள்ளது' என, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள் என்பதாக, 'தமிழர் மீட்சி இயக்கம்' என்ற அமைப்பு, நேற்று முன்தினம், பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்தப் பட்டியலில், 16 அரசு அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அரசியல்வாதிகள் தட்டிக் கழித்தது, பேரம் பேசியது, வங்கிக் கணக்கு ஆவணம், பத்திரம் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து, பட்டிய லைத் தயாரித்ததாக, இந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இதற்கான ஆதாரங்களை வெளியிடாமல், பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளதால், இந்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியல் தவறானது என்பது தெரிய வந்துள்ளது. மாநில தகவல் ஆணைய அதிகாரிகள், சில மாவட்ட கலெக்டர்கள் பெயர், இதில் இடம் பெற்றுள்ளது. திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, சிறப்பான, நேர்மையான பணி செய்து, தொடர்ந்து மூன்று முறை, முதல்வரிடம் விருது பெற்றுள்ளார். விருது பெறப் பரிந்துரைக்கப்படுவோர், எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவராக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனை. அந்த வகையில், தொடர்ந்து மூன்று முறை, சிறந்த முதல்வர் விருது பெற்றுள்ள, கலெக்டர் ஜெயஸ்ரீயின் பெயர், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், மேற்படி அமைப்பின் பட்டியல், தவறாக தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கருத வேண்டி உள்ளது. இதே போன்று, நேர்மையாகப் பணியாற்றி வரும், ஸ்ரீரங்கம் தாசில்தார் பவானி பெயரும், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், பட்டியலின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: ஒரு தன்னார்வ அமைப்பில், யார் வேண்டுமானாலும் உறுப்பினர்களாக இருக்கலாம். உறுப்பினர்களுக்குக் கிடைத்த தகவல்களை வெளியிடுவதற்கு முன், அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். பரபரப்பு கருதி, அப்படியே வெளியிடுவது, அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கி விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிராளிகள், பொய் புகாரைக் கூறும்போது, அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின், புகாரில் உண்மை இருப்பின், அதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தலாம். ஊழல் புரிந்ததாக, பொத்தம் பொதுவாக ஒரு பட்டியலை வெளியிடுவது, சம்பந்தப்பட்டவர்களின் பெயருக்கு, களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி