சுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள்!


கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.

இன்றைக்கு ஆடம்பரத் திருமணங்கள் என்கிற பெயரில் பட்டாசில்தொடங்கி பட்டாடை வரை படோபடம் செய்கிறார்கள். தினமும் கோடிக்கணக் கானோர் பட்டினி கிடக்கும் நிலையில் ஏராளமான உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. தேவைக்கு நுகர்வு என்பது போய் கெளரவத்துக்கு நுகர்வாகி விட்டது. இந்நிலையை மாற்ற பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் ‘மழை, மண், மரம், மானுடம்’ அமைப்பை நடத்தி வரும் ரமேஷ் கருப்பையா. 

சமத்துவத்துக்கான சுற்றுச்சூழல்
‘தி இந்து’விடம் அவர் பேசுகையில், “சமத்துவத்துக்கான சுற்றுச்சூழல் என்பதே எங்களது கொள்கை. இதைத் தான் காந்தியும் வலியுறுத்தினார். நிலத்தை, நீரை, காற்றை, கனிமத்தை கட்டுப் படுத்துவதில் - அதனை பங்கிடுவதில் பூமியில் நிலவும் போட்டியே இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம். ஒரு மரத்தின் பலனை மனிதன் தொடங்கி அனைத்து உயிரினங்கள் வரை தேவைக்கு ஏற்ப சமமாகப் பங்கிட்டுக் கொள்வது இயற்கை பொதுவுடமை. ஆனால், இங்கே அந்த மரத்தையே வெட்டுவதற்கு மனிதர்களுக்குள் போட்டியும் பொறாமையும் நிலவுகிறது. இதன் மூலம் மனிதன் எவ்வளவு ஆபத்தான திசையில் பயணிக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம்!

கௌரவத்துக்காக நுகரும் மனிதன்
உலகில் வேறு எந்த ஓர் உயிரினமும் தனது தேவையைத் தாண்டி நுகர்வது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே கௌரவத்துக்காகவும், கர்வத்துக்காகவும் மிக அதிகமாக நுகர்கிறான். அவனது ஒவ்வொரு நுகர்விலும் பூமிப்பந்து அதிர்ந்து அடங்குகிறது. அவ்வாறான ஆபத்தான நுகர்வு கலாச்சாரங்களுள் ஒன்றாகிவிட்டது திருமணமும். அதனா லேயே பசுமைத் திருமணம் என்கிற கருத்துருவை உருவாக்கினோம். ஓர் இடத்துக்கான தேவைகளை அந்த இடத்தில் இருந்தே பூர்த்தி செய்துக் கொள்வது; சுற்றுச்சூழலை மாசுப்படுத் தாமல் இருப்பது; ஆடம்பரம் தவிர்ப்பது - இவையே பசுமைத் திருமணங்களின் அடிப்படை.

எனக்கும் என் மனைவி செங் கொடிக்கும் நடந்த திருமணம் பற்றி சொன்னால் பசுமைத் திருமணத்தைப் பற்றி புரிந்துக்கொள்வீர்கள். தொழுதூரில் இருக்கும் என் வீட்டு தோட்டமே திருமண களம். மா, பலா, வாழை, தென்னை, தேக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஏராளமான பறவைகள், உயிர்கள் நிரம்பிய ஒற்றைக் கேணி மற்றும் உறவுகள், நட்புகள் சூழ அங்கு என் திருமணம் நடந்தது.

திருமண அழைப்பிதழுக்கான செலவு 30 பைசா
என் திருமண அழைப்பிதழுக்கான செலவு 30 பைசாவுக்கும் குறைவே. என் தோட்டத்து தென்னங்கீற்றுகளே திருமணப் பந்தல் ஆனது. பகல் நேரம் என்பதால் மின்சாரம் தேவை இல்லை. வரவேற்பு பேனரும் தண்ணீர் சாயத்தால் எழுதப்பட்டது. அதை துவைத்தால் மண்ணுக்கு கேடு இல்லாத தண்ணீர் சாயம் கரைந்து போய்விடும். துணியை மறுபயன்பாடு செய்துகொள்ளலாம்; கொண்டோம்.

மணமேடை ஏறும் முன்பு இயற்கைக்கு நன்றி சொல்ல மரக்கன்றுகளை நட்டோம். உழவுக்கு வந்தனை செய்ய மண மேடையில் உழவு கலப்பை வைத்தோம். எங்களுக்கு மலர் மாலைகளுடன், தச்சு வேலை செய்யும்போது கிடைக்கும் மரச்சுருள்களை மாலையாக அணிவிக் கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் நாங் களே மேடையை விட்டு இறங்கி, ஒவ்வொரு விருந்தினரிடமும் சென்று வாழ்த்துப் பெற்றோம். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக புத்தகக் கண்காட்சியும், மண்பாண்டக் கலை கண்காட்சியும் நடத்தினோம். விருந்தினர்களுக்கு தாம்பூலப் பரிசாக மரக்கன்று, சூழலியல் கையேடு வழங்கினோம்.

இதுவரை கடலூர், ராமநாதபுரம், மண்டபம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பசுமைத் திருமணங்களை நடத்தியுள்ளோம். வரும் பிப்ரவரி 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரு பசுமைத் திருமணத்தை நடத்துகிறோம். நீங்களும் வாருங்கள், வந்து வாழ்த்துங்களேன்” என்றார்.

பசுமைத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன. பாரம்பரிய சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய வகை உணவுகளே விருந்தாக வழங்கப்படுகிறது. காலை விருந்தாக தேன், தினை மாவு உருண்டை, முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவ தானிய அடை, நாட்டு காய்கறி அவியல், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நொங்கு வழங்குகிறார்கள். மதியம் சிகப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறிகள் குழம்பு, கம்பு தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லம் பருப்பு பாயாசம் வழங்கப்படுகிறது. சமையலுக்கு எண்ணெய் கிடையாது. பெரும்பாலும் கிராம நீர்நிலைகளின் நீரையே இயற்கை முறையில் சுத்திகரித்து குடிநீராக பரிமாறுகிறார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி