நாளை நடைபெறும் தேசிய தகுதி தேர்வில் பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி’ முறை வினாத்தாள் வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


விரிவுரையாளர் பணியிடத்துக்கு வருகிற 29–ந் தேதி நடைபெறும் தேசிய தகுதி தேர்வின்போது, பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி‘ முறை கேள்வித்தாள்களை வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் மிராண்டா டாம்கின்சன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தேசிய தகுதி தேர்வு
நான் எம்.ஏ. சமூகவியல் மற்றும் எம்.ஏ. பொதுநிர்வாகம் ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளேன். கல்லூரி விரிவுரையாளர் பதவிக்காக பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) நடத்தும் தேசிய தகுதி தேர்வு எழுத உள்ளேன்.

நான் பிறக்கும்போதே, கண் பார்வையில்லாமல், காது சரிவர கேட்காமலும் பிறந்தேன். இதனால், ‘பிரைலி‘ முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வழங்கினால், தேர்வு எழுத எனக்கு வசதியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் தேசிய தகுதி தேர்வினை யூ.ஜி.சி நடத்தியபோது, பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வழங்கப்படவில்லை. இதனால், நான் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கண்ணியத்துடன் வாழ ஆசை

இதனால் ‘பிரைலி‘ முறை கேள்வி வழங்கும்படி, யூ.ஜி.சி.க்கு பல முறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தும், பதில் இல்லை.

கண் பார்வை இல்லாமல், காது சரிவர கேட்காமல் இருந்தாலும், விரிவுரையாளர் பணி செய்து, இந்த சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறேன். மேலும், மத்திய சமூக நீதித்துறை கடந்த 26–2–2013 அன்று அலுவலக குறிப்பாணை வெளியிட்டுள்ளது.

அதில், தேர்வின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பிரைலி முறையில் தேர்வு எழுத வசதி செய்து தரவேண்டும். அவர்களுக்கு தேவையான கூடுதல் நேரத்தையும் வழங்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பிறப்பித்துள்ளது.

அனைவருக்கும் வழங்கவேண்டும்
எனவே வருகிற டிசம்பர் 29–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தேசிய தகுதி தேர்வில், பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்களை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:–

தேசிய தகுதி தேர்வு வருகிற டிசம்பர் 29–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் மனுதாரர் மட்டுமல்லாமல், அவரை போல் பார்வை இழந்தவர்களுக்கு ‘பிரைலி‘ முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளை வழங்கவேண்டும் என்று யூ.ஜி.சி.க்கு உத்தரவிடுகிறேன்.

முடிவு வெளியிடக்கூடாது

இதன் மூலம் மனுதாரர் மற்றும் அவரை போன்ற மாற்றுத்திறனாளிகள் எளிதாக தேர்வு எழுத முடியும். ஒருவேளை இந்த வசதியை யூ.ஜி.சி. அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்றால், அந்த செயல் தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் பாகுபாட்டை உருவாக்கும் விதமாக உள்ளது என்று தெளிவாகி விடும்.

மாற்றுத்திறனாளிகளின் கஷ்டங்களை அதிகாரிகள் கருத்தில் எடுத்துக் கொண்டு, அவர்களை இங்கும் அங்கும் அலையவிடாமல் தேவையான உதவிகளை செய்துக்கொடுக்கவேண்டும்.

இந்த வழக்கு இறுதிகட்ட விசாரணைக்காக வருகிற ஜனவரி 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இந்த வழக்கை விசாரணை பைசல் செய்யும்வரை, தேசிய தகுதி தேர்வின் முடிவுகளை வெளியிடாமல், நிறுத்தி வைக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி