புதிய வடிவில் மாதாந்திர வைப்பு தொகை திட்டம் : அறிமுகம் செய்கிறது பாரதிய மகிளா வங்கி


சென்னை: மாதாந்திர வைப்புத் தொகைத் திட்டத்தை (ரெக்கரிங் டெபாசிட்) காப்பீட்டுடன் அளிக்கிறோம். இதன்மூலம், வைப்பு தொகை திட்ட காலம் முடிவதற்குள், வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்துக்கு, முதிர்வு தொகை முழுவதும் வழங்கப்படும்,'' என, பாரதிய மகிளா வங்கி தலைவர் உஷா அனந்த சுப்ரமணியன் கூறினார்.

இதுகுறித்து, அவர் அளித்த சிறப்புப் பேட்டி: மத்திய அரசின் நிதியுதவியுடன், நாட்டில் துவங்கப்பட்ட முதல் அரசுடமை வங்கியாக, பாரதிய மகிளா வங்கி துவங்கப்பட்டுள்ளது. பெண்கள்,
ஆண்கள் இருபாலாரும், இந்த வங்கியில் கணக்கு துவங்கலாம். கடனும் பெறலாம். ஆனால், பெண்களை ஊக்குவிப்பதற்காக, சிறப்பு திட்டங்களும், குறைந்த வட்டியில் கடனும் அளிக்கப்படும்.
வர்த்தக வங்கிகளின் வட்டி விகிதத்தை விட, தொழில் மற்றும் கடன் தொகைக்கு ஏற்ப, பெண்களுக்கு அளிக்கும் கடனுக்கு, 0.25 முதல் 0.50 சதவீதம், வட்டி குறைப்பு அளிக்கப்படும். இதற்காக, கடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பாரதிய மகிளா வங்கிக்கு, ஒன்பது பெருநகரங்களில் கிளைகள் துவங்கப்பட்டுள்ளன. விரைவில், ஒவ்வொருமாநில தலை நகரங்களிலும், பாரதிய மகிளா வங்கிக் கிளைகள் திறக்கப்படும். 

55 நகரங்களில்... : 2014-15ம் நிதியாண்டில், இரண்டாம் நிலை நகரங்கள் என, 55 நகரங்களில், கிளைகள் ஆரம்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து, கிராமங்களை நோக்கி, வங்கி செல்லும். பாரதிய மகிளா வங்கிக் கிளைகள், கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம்., வசதிகள் கிளைகளில் உள்ளன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இணையதள வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகள் அளிக்கப்படும். இதற்கான, மென்பொருள்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

புதிய முறை : பெண்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழில்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, அனைத்து நவீன வசதிகள் கொண்ட குழந்தைகள் காப்பகம், சிறிய உணவு கூடங்கள் போன்றவற்றுக்கு கடன் வழங்க முடிவு செய்துள்ளோம். சேமிப்பு மற்றும் மாதாந்திர வைப்புத் தொகைத் திட்டங்கள் பிற வங்கிகளைப் போல இருந்தாலும், மாதாந்திர வைப்புத் தொகைத் திட்டத்தில், புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். மாதாந்திர வைப்புத் தொகை செலுத்துவோருக்கு, அவர்களின் திட்ட காலம் முடிந்ததும், வட்டியுடன் முதிர்வு தொகை அளிக்கப்படும். திட்டகாலத்தில், வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவர் செலுத்திய காலம் வரையிலான வைப்பத் தொகை, வட்டியுடன் வழங்கப்படும். 
ஆனால், பாரதிய மகிளா வங்கி, மாதாந்திர வைப்புத் தொகை திட்டத்தை, காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.

வரவேற்பு கிடைக்கும் : இதன்மூலம், முதிர்வு தொகைக்கு காப்பீடு செய்யப்படும். திட்ட காலம் முடிவதற்குள், வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்துக்கு, முதிர்வு தொகை, வட்டியுடன் அளிக்கப்படும். இத்திட்டம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும் என, எதிர்பார்க்கிறோம்.
இத்திட்டத்தை, பாரதிய மகிளா வங்கி தான், வங்கித் தொழிலில் முதல்முறையாக அமல் செய்கிறது.
பெண் குழந்தைகளுக்கான கல்வி கடனுக்கு ஒரு சதவீத வட்டிக் குறைப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல், பெண்களே வாகனங்கள் வாங்கி, ஓட்டும்போது, அவர்களுக்கு, 0.50 சதவீத வட்டிக்கு குறைப்பு வழங்கப்படும். மேலும், வீட்டு கடன், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் போன்றவையும், பாரதிய மகிளா வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, உஷா சுப்ரமணியன் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி