மாண்ட்டே வீடியோ, டிச. 28-
அந்த இன்ப அதிர்ச்சியை தருபவர், உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77). ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் வாழ்ந்து வருகின்றார்.
இவரது வீட்டுக்கு இரண்டே இரண்டு போலீசார் தான் காவல் காக்கின்றனர். வீட்டுக்கு பின்புறம் உள்ள பண்ணையில் மனைவியுடன் சேர்ந்து இவர் மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார். மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவினங்களை ஜோஸ் முஜிகா சமாளித்து வருகின்றார்.
2010-ம் ஆண்டு தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த இவர், 1987-ம் ஆண்டில் வாங்கிய 'வோக்ஸ் வேகன் - பீட்டில்' காரை மட்டுமே தனது சொத்தாக காட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.
2009-ம் ஆண்டு உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸ் முஜிகா, 1960-70களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1971-ம் ஆண்டு முதல் 1985 வரை பலமுறை தனிமைச்சிறை உள்பட அடக்குமுறை சட்டங்களின் மூலம் பல்வேறு கடுமையான தண்டனைகளை இவர் அனுபவித்துள்ளார்.
சிறை வாழ்க்கைதான், தன்னை பக்குவப்படுத்தியது என்னும் ஜோஸ் முஜிகா, தன்னைப் பற்றி கூறியதாவது:-
விசித்திரமான முதியவராக நான் தோன்றலாம். ஆனால், இது எனது விருப்பமான தேர்வு. இதேபோல் தான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் கழித்துள்ளேன். இருப்பதைக் கொண்டு என்னால் சிறப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள் தான் ஏழைகள்.
இவ்வாறு அவர் கூறுகின்றார்.
உருகுவே நாட்டின் சட்டத்தின்படி, இரண்டாவது முறையாக யாரும் ஜனாதிபதியாக முடியாது. எனவே, 2014-ல் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் ஜோஸ் முஜிகா, ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக காலம் கழிப்பார் என்று நம்பலாம்.
Source : http://www.maalaimalar.com