ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்

ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.

பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...
2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்பட
பலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர்-ல் பெயர்கள் விடுபட்டவர்களுக்கு தற்போது நடக்கும் முகாம்களில் ஆதார் அட்டை பெற புகைப்படம் எடுக்க முடியாது. ஆனால் இரண்டாம் கட்ட முகாம்களில் புகைப்படம் எடுக்கலாம்.

அதற்கு புதிதாக என்.பி.
ஆர்-ல் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை நகரத்தில் இருப்பவர்கள் மண்டல அலுவலகங்களிலும் கிராமங்களில் இருப்பவர்கள் தாலுகா அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டல அல்லது தாலுகா அலுவலகத்திலேயே சமர்ப்பித்து அதற்கான சான்றை பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களின் தகவல்களை வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் சரி பார்ப்பார்கள். இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த வருடம் நடக்கும் இரண்டாம் கட்ட முகாம்களில் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் உட்பட அனைவரும் புதிய மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலேயே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பதிவுச் சீட்டை தொலைத்தவர்களுக்கு...
என்.பி.ஆர்-ல் பதிவு செய்திருந்தால் ஆதார் அட்டை கிடைக்கும் என்று 2010-ல் அறிவிக்காததால் பலர் கவனக் குறைவாக என்.பி.ஆர். சீட்டை தொலைத்திருக்கலாம். அது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர். சீட்டில் 33 இலக்கம் கொண்ட எண் இருக்கும். அது பதிவு செய்யப்பட்டவர்கள் வசிக்கும் மாநிலம், மாவட்டம், வார்டு ஆகிய தகவல்களை குறிக்கும். எனவே சீட்டை தொலைத்தவர்கள் தங்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சீட்டில் உள்ள எண்ணை குறித்து வைத்து மண்டல அலுவலகத்தில் விசாரித்தால் அவர்களது தகவல்களை மீட்க முடியும். அது மட்டுமல்லாமல் மண்டல அலுவலகங்களில் என்.பி.ஆர் சீட்டின் நகல் இருக்க வேண்டும். அதையும் விசாரித்து பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி மாறியவர்களுக்கு...
என்.பி.ஆர் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் பலர் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இதனால் என்.பி.ஆர். பதிவு செய்யும்போது ஒரு முகவரியிலும் தற்போது வேறு முகவரியிலும் வசிக்கின்றனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர். பதிவு செய்யும் போது எந்த முகவரியில் இருந்தார்களோ அந்த பகுதியில் நடக்கும் ஆதார் முகாமுக்கு செல்ல வேண்டும். அங்கு என்.பி.ஆர் பதிவேட்டில் தங்களது பெயர்கள் இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு தங்களது புதிய முகவரிக்கான சான்றை அளிக்க வேண்டும். அதன் பிறகு புதிய முகவரியில் ஆதார் அட்டை வழங்கப்படும்.
தாங்கள் முன்பு வசித்த பகுதிக்கு செல்ல இயலாதவர்கள் மண்டல அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அப்படி செய்தால் அவர்களுக்கு முதல் கட்ட முகாம்களில் ஆதார் அட்டை பெற முடியாது.
ஆதார் அட்டை பெற்ற பிறகு அதில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், பாலினம் ஆகிய தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால் அதனை திருத்திக் கொள்ளலாம்.
திருத்துவதற்கான விண்ணப் பத்தை ஆன்லைன் மூலமாகவோ அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலேயே தங்களது புதிய அடையாளச் சான்று, முகவரி சான்று, மற்றும் பிறந்த தேதிக்கான சான்றை சமர்ப்பிக்கலாம். அல்லது அஞ்சல் மூலம் பெங்களூருவில் இருக்கும் அலுவலகத்துக்கு

UIDAI Regional Office
Khanija Bhavan
No. 49, 3rd Floor,
South Wing Race Course Road,
Bangalore – 01.
என்ற முகவரியை எழுதி அனுப்பி வைக்கலாம். அதிகாரிகள் தகவல்களை சரி பார்த்த பிறகு ஆதார் அட்டையில் புது தகவல்கள் ஏற்றப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி