டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்- தினமலர் செய்தி


புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.

தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவரும், ஊழல் எதிர்ப்பு போரை துவங்கியவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை பிடித்தது. 

தற்போது காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவை பெற்று இன்று மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சி அமைக்கிறார். இவருடன் 6 பேர் மணீஷ் சிசோடியா , சத்யேந்திரஜெயந்த், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஊழல் களையப்படும்: முதல்வர் ; பதவியேற்றதும் விழா மேடையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்: ஆம் ஆத்மியை தேர்வு செய்த டில்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நேர்மையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. கடவுளுக்கும் , மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போதுதான் எங்களின் உண்மையான போராட்டம் துவங்கியிருக்கிறது. இன்று நானும் எம்.எல்ஏ.,க்களும் பொறுப்பேற்கவில்லை. மக்களும் என்னுடன் இணைந்து பதவியேற்றுள்ளனர். இந்த இடத்தில்தான் ஹசாரேயுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன் போராட்டத்தை துவக்கினேன். இது போன்ற புரட்சி நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 

மக்கள் இல்லாமல் நாம் ஆட்சியை நடத்த முடியாது. அதிகாரிகள் , போலீசாரின் ஆட்சி இங்கு நடக்காது. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்துவோம். மின்கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். பார்லி., தேர்தலை எதிர்கொள்ள ஆம்ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. அழுக்கு நிறைந்ததாக அரசியல் உள்ளது என அன்னா ஹசாரே கூறியுள்ளார். இந்த அழுக்கை நீக்கிட பாடுபடுவோம். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆம்ஆத்மி தயாராக உள்ளது. எந்தவொரு மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். ஊழலை ஒழிக்க அயராது பாடுபடுவோம். ஊழல்வாதிகள் மீது கடும் நடடிக்கை எடுப்போம். பா.ஜ., தலைவர் ஹர்சவர்த்தன் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் முழு சுதந்திரம் கிடைக்க பாடுபடுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரசார் மிஸ்ஸிங்; இன்றைய பதவியேற்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் காங்கிரசார் யாரும் பங்கேற்கவில்லை. பா.ஜ., டில்லி தலைவர் ஹர்சவர்த்தன் பங்கேற்றார். 

கிரண்பேடி வாழ்த்து: கெஜ்ரிவால் பதவியேற்றதும், இவருக்கு அன்னா ஹசாரேயின் அணியை சேர்ந்த கிரண்பேடி வாழ்த்தும், வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் மற்றும் அவரது அணியினர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி, இவர்கள் அரசியிலில் நல்லதொரு மாற்றத்தை செய்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை வரலாறு


பிறந்த தேதி: ஆகஸ்ட் -16 , 1968 .

ஊர் : ஹிசார்

மனைவி: சுனிதா

பள்ளி படிப்பு : ஹிசார்

1989 - 92 வரை டாட்டா ஸ்டீல் பணியாற்றினார்

1995 - சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் இந்திய வருமான வரி துறையில் பணி.

2000- உயர் படிப்பிற்காக 2 ஆண்டுகள் விடுப்பு

2003 - மீண்டும் பணியில் சேர்ந்தார்

2006- வருமான வரி இணைகமிஷனர் பதவியில் இருந்து விலகல்

2012 நவம்பர் 26 ல் ஆம் ஆத்மி கட்சி துவக்கம்.

=  தினமலர் செய்தி 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி