18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு ரத்து

சென்னை: கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை, காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர் நிராகரித்ததை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. "ஆறு வாரங்களில், விண்ணப்பத்தை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரீத்தி என்பவர், தாக்கல் செய்த மனு: என் தந்தை, காஞ்சிபுரத்தில் உள்ள, நில அளவை ஆவணத் துறையில், "பிர்கா சர்வேயர்' ஆக, பணியாற்றி வந்தார். 2003, செப்டம்பரில், தந்தை இறந்தார். கருணை அடிப்படையில், என் சகோதரிக்கு வேலை கோரி, 2004, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில், தாயார் விண்ணப்பித்தார். பின், சகோதரிக்கு திருமணம் நடக்க இருப்பதால், எனக்கு கருணை வேலை கேட்டு, 2005, செப்டம்பரில், விண்ணப்பித்தார். அப்போது, வேலை நியமனங்களுக்கு தடை இருந்ததால், "தடை நீ"ங்கிய பின், வேலை கோரலாம்' என, தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் வேலை கேட்டு, 2011 அக்டோபரில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு, "2005 செப்டம்பரில் விண்ணப்பித்த போது, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது' என, காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர் உத்தரவிட்டார். 2011, நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, பணி நியமனம் வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எல்.சந்திரகுமார், ""எந்த அடிப்படையும் இல்லாமல், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தந்தை இறந்து, மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட்டது. மனுதாரர், 18 வயது பூர்த்தி அடைந்துள்ளார்,'' என்றார். அரசு தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "அரசு பணியில் சேர, குறைந்தபட்ச வயது வரம்பு, 18, என, ஊழியர்கள் நலத் துறை நிர்ணயித்துள்ளது. கருணை வேலை கோரி விண்ணப்பிக்கும் போது, மனுதாரர், 18 வயது பூர்த்தி அடையவில்லை' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: கருணை வேலை கோரிய விண்ணப்பம், 2011 நவம்பரில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்போது, மனுதாரர், பிரீத்தி, 18 வயது பூர்த்தி அடைந்துள்ளார். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு, நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. தந்தை இறக்கும் போது, பிரீத்தி, சிறுமியாக இருந்தார். குறிப்பிட்ட காலத்துக்குள், கருணை வேலை கோரி, அவரது தாயார் விண்ணப்பித்து விட்டார். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்தது, ரத்து செய்யப்படுகிறது. வேறு ஆட்சேபனை தெரிவிக்காமல், விண்ணப்பத்தை, ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து, புதிய உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி