கனவு ஆசிரியர் ! மலையாக உயர்ந்த மக்கள் ஆசிரியர்......THANKS TO அருள் பி ஜி


சில திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கிராமத்தில் ஓர் ஆசிரியர்... அவரை அந்த ஊரே மதித்து வணங்கும். அது போன்று எல்லோரும் மதிக்கும் தகுதியுடன் வலம்வருகிறார், கோவை, தூமனூர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜ்.

'நான் ஊட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்தேன். இங்கே மாற்றலாகி வரும்போது, ஊரின் நிலையைப் பார்த்து ஆடிப்போனேன். காரணம், இங்கே மருத்துவமனை, மின்சாரம், வாகனம் என எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. தினமும் ஐந்து கிலோமீட்டர் காட்டுப் பாதையில் நடந்துவர வேண்டும். வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அப்போது, இது தொடக்கப் பள்ளி. எனவே, நான் மட்டுமே ஆசிரியர். அப்போது படித்த மாணவர்களின் எண்ணிக்கை, 12 பேர் மட்டுமே. ஆனாலும், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இங்கே என் கல்விப் பணியைத் தொடர்ந்தேன். அப்போதுதான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன்'' என்கிறார் ஜெயராஜ்.

இங்கே, தொடக்கப் பள்ளி படிப்பு முடிக்கும் மாணவர்கள், மேல் படிப்புக்கு பக்கத்து ஊரான ஆனைக்கட்டிக்குச் செல்ல வேண்டும். அங்கே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள், பண்டிகைகளுக்கு ஊருக்கு வந்தால், அவ்வளவுதான். திரும்பிச் செல்ல மாட்டார்கள். இப்படியே இங்கே இருக்கும் மாணவர்களுக்கு முழுக் கல்வியும் கிடைக்காமல் இருந்தது.

''இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், இந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும்.அதற்கான முயற்சியில் இறங்கினேன். நடுநிலைப் பள்ளிக்கு என, சில கட்டமைப்பு வசதிகள் தேவை. அதை உருவாக்க, பலரையும் அணுகினேன். நகர்ப்புறங்களில் வசதிகள் செய்துதந்து, விளம்பரம் தேடுவதிலேயே குறியாக இருந்தவர்கள், இந்தப் பள்ளியைக் கண்டுகொள்ளவே இல்லை. எனவே, ஊர் மக்களின் உதவியுடன் நாங்களே கட்டடங்கள் கட்டினோம். 2010-ல் நடுநிலைப் பள்ளியாக மாறியது'' என்கிற ஜெயராஜ், அத்துடன் ஓய்ந்துவிடவில்லை.

பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டபின், ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி வெற்றிபெற்றிருக்கிறார். இப்போது, இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

''ஜெயராஜ் ஆசிரியர் எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். ஆரம்பத்தில் நடந்துதான் பள்ளிக்கு வருவோம். இப்போது இவரது முயற்சியினால் ஒரு ஜீப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஜாலியாக வருகிறோம். முன்பு, குச்சிப் பாய்களில் அமர்ந்து பாடம் படிப்போம். இப்போது டேபிள், டெஸ்க் வந்துவிட்டன. கடந்த ஆறு வருடங்களில்... பள்ளியுடன் சேர்த்து ஊரையே மாற்றிவிட்டார்'' என்று உற்சாகத்துடன் பேசுகிறார்கள் மாணவர்கள்.

''ஊர் மக்களே சேர்ந்து இந்தப் பள்ளியைக் கட்ட முடிவு செய்தபோது, பணம் கொடுத்ததோடு, தனது மோதிரத்தையும் விற்றுக் கொடுத்தார். குடும்பத்தைவிட்டு இங்கே தங்கியுள்ளார். இவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை' என்று நெகிழ்கிறார்கள் ஊர் மக்கள்.

இது மட்டுமின்றி, இவர் அடித்த சிக்ஸரில் இன்னொன்றும் உள்ளது. உயர்கல்வி முடித்த ஐந்து மாணவர்களுக்கு, இவருடைய சொந்தச் செலவிலேயே கல்லூரிக் கல்விக் கட்டணமும் கட்டி, அவர்களைப் பட்டதாரி ஆக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

''இதை எல்லாம் சேவை என்றோ, சாதனை என்றோ நான் நினைச்சதே இல்லை. ஏன்னா, என் வேலை கல்வியைக் கற்றுத் தருவதுதான். அதற்கான அடிப்படையில் பிரச்னை இருந்தது. அதைச் சரிசெய்தேன், அவ்வளவுதான். இது என்னுடைய கடமை'' என்று அடக்கத்துடன் புன்னைகைக்கிறார் ஜெயராஜ்.

மலைப் பகுதி என்று மலைத்துவிடாமல், தனது முயற்சியால் எல்லோரின் மனதிலும் மலையாக உயர்ந்திருக்கிறார் இந்த மக்கள் ஆசிரியர் ஜெயராஜ்.....


Courtesy : http://sstaweb.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி