தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை - Dinamalar

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

மதுரை, புதூர் விஜயலட்சுமி, தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி தமிழாசிரியர், 605 பணி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஜூலை 21ல் தேர்வு நடந்தது. "பி&' வரிசை வினாத்தாளில், 150 கேள்விகளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. உதாரணமாக, வினா, 70ல், "ஆதுகில கிழக்கிந்திய கம்பெனி யாருடைய ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையை பெற்றது; வினா 75ல், தமிழ்மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும் என்று உரைத்தவர்?; என பிழைகள் உள்ளன.


இவற்றிற்கு, முழு மதிப்பெண் வழங்கக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பித்தேன்; நடவடிக்கை இல்லை. அச்சுப்பிழை உள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். வினாத்தாளை ஆய்வு செய்த நீதிபதி, எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; இதைக் கண்டு வெட்கப்படுகிறேன்.


இதுபோல் ஒரு வழக்கு, சென்னை ஐகோர்ட் முதன்மை பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். "எதிர்காலத்தில், இம்மாதிரி தவறுகள் நடக்காது"என, கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், அதிகாரிகள் குறித்த கருத்தை, ஐகோர்ட் திரும்பப் பெற்றது. அதிகளவில் ஆசிரியர்கள் நியமனத்திற்காக, தேர்வு நடத்தும் போது, வினாத்தாள் தயாரிப்பதில், அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குனர், செப்., 16ல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி