இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு -DAILY THANTHI -all over world news


இதுவரை தடைபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு அரசின் ஆணைக்கு உட்பட்டு பணிமாறுதல் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர் தேர்வு 
கடந்த 2007–ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக கல்வித்துறை 2007–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்தமனு, தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின் இருநபர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாநில அளவில் 
இடைநிலை ஆசிரியர் தேர்வு முறையானது மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் உத்தரவிட்டது.

கடந்த 2008–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர், மற்றொரு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, ஒட்டுமொத்த மாநில அளவில் தான், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 2008–ம் ஆண்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், அதிக காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியை நிரப்ப, தமிழக அரசுக்கு அனுமதியளித்தது. மேலும், ஒரு மாவட்டத்தில் தேர்வாகும் ஆசிரியர்கள், தன் சொந்த மாவட்டத்தில் தான் பணியிடம் வேண்டும் என்றோ அல்லது இடமாறுதல் வேண்டும் என்றோ கோரக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு 7000 ஆசிரியர்களை நியமனம் செய்தது. அதில், 5000 ஆசிரியர்கள் தொலைதூர, பிற வெளிமாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் 2009–ம் ஆண்டு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேற்படி 2009–ம் ஆண்டு சட்டப்படி தேவையற்றதாகிவிட்டது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவால் பாதிக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு செய்தனர்.
இடமாறுதல் வழங்கலாம் 

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எச்.எல்.கோகலே மற்றும் ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காததால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை முடிவுக்கு வந்தது. இதுவரை தடைபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களின் கோரிக்கை அரசின் ஆணைக்கு உட்பட்டு மாவட்ட பணிமாறுதல் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அளித்த ஆசிரியர் பரிசாக இது விளங்குகிறது என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி