ஆசிரியர்கள் கூறும் பெற்றோருக்கான அறிவுரைகள் !


பிள்ளைகள் கல்வியில் பெற்றோர்க‌ளின் க‌ட‌மைக‌ள்: 

"ஆசிரிய‌ர் தன் மாண‌வ‌னுக்கு இர‌ண்டாவ‌து பெற்றோர்... பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு இர‌ண்டாவ‌து ஆசிரிய‌ர்" என்ற‌ புதுமொழிப்ப‌டி பெற்றோர்க‌ள் தங்க‌ள் பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு அனுப்பி க‌ல்வி க‌ற்க‌ வைக்கின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்கள் த‌ன் பிள்ளைக‌ளை ப‌ள்ளிப்படிப்பை க‌டைசி வ‌ரை க‌ண்காணிக்கிறார்க‌ளா? (குறிப்பாக‌ ந‌ம‌தூரில்) என்ப‌து கேள்விக்குறியாக‌வே இருக்கிற‌து.

பெற்றொர்கள் தம் பிள்ளைகளை ஒருசிலர் வெளியூர்களிலும் ஒருசிலர் உள்ளூர்களிலும் படிக்க வைக்கின்றனர். வெளியூர்களில் படிக்க வைக்க காரணம் கேட்டால் உள்ளூர் பள்ளிகளில் கல்வித்தரம் சரியில்லை என்ற உட்கருத்துதான். ஆனால் அதுவல்ல காரணம் உண்மை என்னவென்றால் தம்பிள்ளைகளை கண்காணிக்கப் படாததே காரணம்.

தம்பிள்ளை வெளியூரில் படித்து முன்னேறி இருக்கிறானா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கு 20% தான் ஆம் என்ற பதில் வருகிறது. காரணம் பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து கண் காணாத இடத்தில் இருப்பதுதான். அவன் என்ன செய்கிறான்? அவன் நடப்பு எப்படி? என்பது பற்றி ஒன்றுமே அறியாமல் இருக்கின்றனர்.

ஆனால் இப்பொழுது வெளியூர் ஹாஸ்டல் மற்றும் பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களில் 50% மாணவர்கள் மட்டுமே ஒழுங்குடன் இருக்கின்றனர். மீதம் 50% மாணவர்களுக்கு கல்வி வளர்கிறதோ இல்லையோ கூடவே கெட்ட பழக்கவழக்கங்களும் வந்து விடுகிறது.

இன்று நமதூரில் பெரும்பாலான பெற்றோர்கள் வெளியூரில் படித்த தம் பிள்ளைகளை பாதியில் நிறுத்தி உள்ளூர் பள்ளிகளில் சேர்கின்றனர். அந்த பிள்ளைகளை பரிசோதித்த விதத்தில் அதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை விட புதிதாக உள்ள மாணவர்களிடம் சில கெட்டப் பழக்கங்களை காண முடிகிறது. மேலும் இவர்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களும் கெடுகின்றனர். ஆகவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை முடிந்த அளவு தம் நேரடிக் கண்காணிப்பில் வைப்பதுதான் இந்தக்கால பிள்ளைகளுக்கு பொருந்தும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகள் :

1. பிள்ளைகள் பள்ளிச் சென்ற நேரம் போக மீத‌ நேரங்களில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

2. த‌ம் பிள்ளைகளின் நண்பர்களை பற்றி விசாரித்துக் கொள்ளவேண்டும்.

3. மாலைநேர விளையாட்டைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதிக்க வேண்டாம்.

4. குறைந்தது வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ தம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று அவர்களின் வருகை பதிவு, தேர்ச்சி விசயங்களைப் பற்றி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரையோ சந்தித்து கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

காரணம் : சில மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவ‌துதான் தெரிகிறது. அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மற்ற ஆள் இல்லா இடங்களில் நேரத்தை கழித்து அதில் புகை பிடித்தல் போன்ற கெட்ட செயல்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

5. பெற்றோர்களின் கூட்டம் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாதம் ஒருமுறை நடத்தப்படுகிறது. அதில் பெற்றோர்கள் அவசியம் கலந்துக் கொள்ள வேண்டும்.

6. தினமும், விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, உங்கள் முன் அமர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

7.பைக், செல்போன்களை அவசியமான நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கொடுக்க வேண்டாம். குறிப்பாக Multimedia செல்போன்கள் கொடுப்பதை அர‌வே தவிற்கவும். இதன்மூலம் தீமைகள் தான் அதிகமே தவிர நன்மைகள் குறைவு..

8. பிள்ளைகளை படிப்பை விட்டு இடையில் நிறுத்தாதீர்கள். மேலும் கல்வி அரசு/அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் (10 ஆம் வகுப்பு வரை) இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.

9.கல்வி பயிலும் பிள்ளைகள் வணக்கஸ்தலம்(பள்ளிவாசல்), பள்ளிக்கூடம்(கல்வி கற்கும் இடம்,டியூசன் சென்டர்), வீடு(தங்கும் இடம்) ஆகியவற்றை தவிர மற்ற இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிற்கவும்.

10.அரசால் நடத்தப்படும் பள்ளிக் குழந்தைகளுக்கான திறனறித் தேர்வுகளில் அவ்வப்போது கலந்து அறிவை வளர்க்க உதவ வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பிற்கான தகுதிதேர்விற்காக தயார்படுத்தலாம்.
குறிப்பு: நமதூர் பிள்ளைகளின் பங்கு இப்படிப்பட்ட தேர்வுகளில் மிகக்குறைவு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

11. வீட்டில் இணைய இணைப்பு இருந்தால் அதில் உள்ள கணிப்பொறியை வீட்டில் பொதுவான இடத்தில் வைத்து பார்க்கும்படி வைக்கவும்.(நம் கண்ணில் படும்படி பிள்ளைகள் பயன் படுத்திக்கொள்ள அனுமதிக்கவும்).

பிள்ளைகள்தான் வருங்காலத்தில் நாட்டின் கண்கள், நமது வீட்டின் தூண்கள் என்பதை மனதில் வைத்து அவர்களின் கல்வி நலனிலும், நல்ல செயல்களின் ஊற்றுக்கண்ணாக கொண்டுவருவது நமது கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்வோமாக.

ஆக்கம்: காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி