கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்தவர் திவ்யா. இவர்,பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
நான், பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம் படிப்பு முடித்து பி.எட் படித்துள்ளேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். 93 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றேன். எனது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில் எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
தண்டிக்க வேண்டும்
காரணம் கேட்டபோது, பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம், பி.ஏ ஆங்கில இலக்கியத்துக்கு இணையானது அல்ல என்றும், இதன் காரணமாகவே எனக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
27.11.2012 அன்று பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம், பி.ஏ ஆங்கில இலக்கியத்துக்கு இணையானது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எனக்கு வேலை வழங்க 21.1.2013 அன்று உத்தரவிட்டது. இருந்தபோதிலும் எனக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.
எனவே, கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோரை கோர்ட்டு அவமதிப்பின் கீழ் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சண்முகராஜா சேதுபதி ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.