புதுடில்லி : நகர்ப்புற வீதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 2009ம் ஆண்டு தேசிய ஒழுங்குமுறை கொள்கையின் அடிப்படையில், அந்தந்த பகுதி வர்த்தக சங்கங்கள் மூலம் இந்த நடைபாதை வியாபாரிகளை முறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறாக நடைபாதை கடைகள் பெருகி வருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது : நகர்ப்புற வீதிகளில் வியாபாரிகள், விதிமுறைகளை மீறியும் வியாபார எல்லையை தாண்டி போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையூராக கடைகள் அமைத்து வருவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது; நடைபாதை வியாபாரிகள் அந்தந்த நகரங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழே இயங்க வேண்டும்; அவர்கள் விதிக்கும் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பொதுநல அமைப்புக்கள், வீதிகளில் விற்பனை செய்வோர் ஆகியோர்களை கொண்ட நகர வியாபாரிகள் கழகம் ஒவ்வொரு நகரத்திலும் அமைக்க வேண்டும் எனவும், இந்த வியாபாரிகளில் 30 சதவீதம் பெண் வியாபாரிகளாக இருக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சிகளிலும் நடைபாதை வியாபாரிகள் மண்டலம் மற்றும் துணை மண்டலங்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் தலைவரை பிரதிநிதியாக அமைத்து வியாபாரிகள் கழகம் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நடைபாதை வியாபாரிகள் மீது வியாபாரிகள் கழகத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், இந்த வியாபாரிகள் கழகம் அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த கழகங்கள் அமைக்கும் பணிகள் குறித்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் 4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
= தினமலர்