புதுடில்லி: யாருக்கும், ஓட்டு போட விருப்பமில்லை என்றாலும், எந்த வேட்பாளரையாவது நிராகரிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் விரும்பினாலும் இதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கும் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் ஆவன செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஒரு புதிய தீர்ப்பை அறிவித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஒட்டளிக்கும் விஷயத்தில் யாருக்கும் , விருப்பமில்லை என்று வெளிப்படுத்தும் விண்ணப்பம் 49 ஓ என்ற சரத்து தொடர்பாக பொதுநல மனு ஒன்றை முன்னாள் நீதிபதி சச்சார் என்பவர் தொடுத்தார். இந்த வழக்கை நீதீபதி சதாசிவம் தலைமையில் பெஞ்ச் விசாரித்தது. இதன் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று அறிவித்தனர்.
ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு:
ஓட்டளிப்பதற்கு விருப்பமில்லை என்ற எண்ணத்தை பிரதிபலிக்கவும், வேட்பாளரை வேண்டாம் என அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிராகரிப்பதற்கும் உரிமை உண்டு. இதற்கான வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கென மின்னணு ஓட்டுப்பதிவு இயத்திரத்தில் ஒரு ஆப்ஷனை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பொத்தானை அழுத்தும் வகையில் அமைக்க வேண்டும். யாருக்கும் ஓட்டளிக்காதவர்கள் எண்ணிக்கையையும், நிராகரிப்போர் எண்ணிக்கையும் வெளியிட வேண்டும். இது ஜனநாயகத்தின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். ஒட்டளிப்பது எவ்வளவு முக்கியம் என்று பிரசாரம் செய்வது போல் நிராகரிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தவும் தேர்தல் கமிஷன் விழிப்பபுணர்வு ஏற்படுத்தலாம். இந்த விஷயத்தில் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பலமான செய்தியை வாக்காளர்கள் சொல்ல முடியும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் என்பது ஒருவரை தேர்வு செய்யதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் எதிர்ப்பது என்பதை காட்ட தேவையில்லை என்று மத்திய அரசு வக்கீல் எடுத்துரைத்தார். ஆனால் இதனை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. இந்த மாற்றத்திற்கு தேர்தல் கமிஷன் சம்மதம் தெரிவித்தது. வாக்காளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதுரையை கோர்ட் ஏற்று கொண்டது.
இந்த தீர்ப்பு குறித்து பா,ஜ., வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில் தேர்தல் சீர்திருத்தம் தேவையான ஒன்றாகும். இதற்கு நாங்கள் வரவேற்பு அளிக்கின்றோம். கோர்ட் தீர்ப்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
செய்தி : தினமலர்