கல்வித் தகவல் இணையதளங்கள்!

இந்திய மருத்துவ கவுன்சில்  : www.mciindia.org

இந்தியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அமைப்பு எம்.சி.ஐ. எனப்படும் இந்திய மருத்துவக் கவுன்சில். மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவும் இந்த நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மருத்துவக் கல்வித் தரத்தை கண்காணித்து கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கவும், அங்கீகாரத்தை ரத்து செயவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் படிப்புகள், எந்தெந்தக் கல்லுரிகளில் முதுநிலைப் படிப்புகள் உள்ளன, எந்தெந்த மருத்துவமனைகளில் பயிற்சி வகுப்புகளுக்கான வசதிகள் இருக்கின்றன என்பதையும் எம்சிஐ பட்டியலிட்டு இருக்கிறது. மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலில் தங்களுடைய பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் இந்த இணையதளத்தில் உள்ளன. மருத்துவம் படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இணையதளம் இது.

பல்கலைக்கழக மானிய குழு : www.ugc.ac.in

இந்தியாவில் உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அமைப்புதான் யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு. நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை மேம்படுத்துவதற்கு நிதி உதவியையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு இது. பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதும், ஆராய்ச்சிப் பணியினை ஊக்குவிப்பதும் இதன் முதன்மையான பணி.

மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் உதவித் தொகைகள் குறித்தும் ஆசிரியர்களின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறித்தும் தெரிந்து கொள்ளலாம். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலும் உண்டு. அங்கீகாரம் பெறாத போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களும் உண்டு. நெட், ஸ்லெட், பி.எச்டி. முடித்தவர்கள் இந்த இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. பதிவு செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், உங்களைப் பற்றிய தகவல்களை இந்த இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். யூ.ஜி.சி. ஆண்டுக்கு இரண்டு முறை நெட் தேர்வை நடத்துகிறது. முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், முதுநிலைப் பட்டத்தை முடிக்கும் நிலையில் உள்ளவர்கள் இதுகுறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த காலங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வுகளின் வினாத்தாள்களையும் வைத்திருக்கிறார்கள். அதனை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம். 

www.ugcnetonline.in என்று தனி இணைய தளம் இதற்காக உள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல தகவல் களஞ்சியம் யு.ஜி.சி. இணையதளம். 


அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் : www.aicte-india.org

தொழில்நுட்பக் கல்விக்கு தலைமை அமைப்பு போல செயல்படுகிறது ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில். தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் படிப்புகளுக்கும் அங்கீகாரம் தரும் அமைப்பு இது. உங்கள் பகுதியில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி) எப்போது அனுமதி பெற்றிருக்கின்றன, என்னென்ன படிப்புகளை நடத்துவதற்கு அனுமதி பெற்றிருக்கின்றன போன்ற தகவல்களை இந்த இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். தொழில்நுட்பப் படிப்பு படிக்கும் போது என்னென்ன நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகின்றன என்பதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்னென்ன விருதுகள் மற்றும் ஆராய்ச்சி நிதி உதவி வழங்குகிறார்கள் என்பது போன்ற விவரங்களையும் இந்த இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி