எதிர்காலத்தை வளமாக்கும் மென் திறன்


 தற்போது உலகமே ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியங்கள் உலகமயமாக்கல் முயற்சியால் தென்படுகின்றன.

          உலகமயமாக்கலின் விளைவாக சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இணைந்து மல்டி நேஷனல் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக உலகமே சிறு பந்தைப் போல் மாறிவிட்டது.

             இத்தகைய அதிவேக, இயந்திரமயமாக்கப்பட்ட உலகில் ஒருவருக்கு வேலை கிடைப்பது என்றாலும் சரி, இருக்கும் வேலையில் முன்னேற்றம் காண்பதென்றாலும் சரி, அதற்கு தொழில் நுட்ப ரீதியிலான தகுதிகளுடன் கூடுதல் தகுதிகளும் தேவைப்படுகின்றன. இந்த கூடுதல் தகுதிகள் ஒரு தனி நபரின் ஆளுமை (பெர்சனாலிடி) தொடர்புடையவை. இதனால்தான் இவற்றை சாப்ட் ஸ்கில்ஸ் என்று கூறுகிறார்கள். பலரும் நினைப்பது போல் சாப்ட் ஸ்கில் என்பது ஒரு தனி நபரின் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறமைகள் அல்ல.

              இவை தனி நபரின் தகவல் பரிமாற்ற மற்றும் பெர்சனாலிடி தொடர்புடைய திறமைகளாகும். நல்ல தகவல் பரிமாற்றம் என்பது உரிய வார்த்தைகளை உபயோகிப்பது, வார்த்தைகளைப் பிரயோகிப்பதற்கான கால அவகாசம், வார்த்தைகளை கையாளும் லாகவம், குரலில் ஏற்ற இறக்கம் மற்றும் உடல் அசைவுகள் என்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

           இன்றைய நிறுவன சூழலில் சரியான நேரத்தில் சரியான விதத்தில் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் எத்தகைய இக்கட்டான நிலையிலும் தொடர்புடைய நிறுவனத்தை பாதுகாக்கும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

             இதனால்தான் பிரபல ஐ.டி., நிறுவனங்கள், ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள், யு.பி.எஸ்.சி., நிர்வாகவியல் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், எம்.என்.சி., நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிக்கு சேர விரும்பும் பிரெஷர்களிடம் இத்தகைய சாப்ட் ஸ்கில் எப்படி உள்ளது என்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றன.

              அனைத்து கல்வித் தகுதிகளும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரு தனி நபருக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதில் சாப்ட் ஸ்கில் எனப்படும் மென் திறனுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றைப் பற்றிய தெளிவான பார்வை நமக்கு தேவை.

நல்ல தகவல் பரிமாற்றத்தின் விளைவுகள்
ஒரு தகவல் பரிமாற்றம் என்பது தெளிவானதாக இருந்தால் அது பின்வரும் நன்மைகளை செய்கிறது: நன்கு கவனித்து கேட்பதை எளிதாக்குகிறது, சரியான தகவல்களை அனுப்புகிறது, உடன் பணி புரிவோர் மற்றும் பணியாளர்களின் நம்பிக்கையைப் பெறுகிறது, வார்த்தைகள் சாராத மனதில் பதியத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சாப்ட் ஸ்கில்சின் உபயோகங்கள்
நாம் ஏற்கெனவே விவாதித்தபடி ஒவ்வொரு தனி நபரும் சாப்ட் ஸ்கில் எனப்படும் மென் திறனை பின்வரும் காரணங்களுக்காக வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; சக ஊழியர்களுடன் பணி புரியத் தேவைப்படும் உறவு மேலாண்மை, உரிய முடிவுகளை எடுக்க முடிகிறது, சரியான விதத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய வைக்கிறது, தொழில்ரீதியான மேம்பாட்டிற்கான நேர்மறை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சாப்ட் ஸ்கில்சின் சில வகைகள்
சாப்ட் ஸ்கில்ஸ் என்பது ஒரு தனி மனிதனின் பல்வேறு பிரிவு சம்பந்தப்பட்ட அவரது ஆளுமையுடன் தொடர்புடைய சிறப்பு குணம் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இப்போது சாப்ட் ஸ்கில் எவை எனப் பார்ப்போம்.
இதன் மூலம் எந்தெந்த வகைகளில் எல்லாம் நமது மென் திறன்களை வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கும்.
1. வார்த்தைகளால் செய்யப்படும் தகவல் பரிமாற்றம்
சரியான வார்த்தைகளை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் பரிமாற்றம் செய்தல்.
2. உடல் மொழி
பாடி லாங்குவேஜ் என்று சொல்லப்படும் இந்த திறன் ஒரு மனிதரைப் பற்றிய உண்மையான நிலையை பெரிதும் வெளிப்படுத்தும் என்பதால் முடிந்த வரை ஒத்துக் கொள்ளும் உடல் அசைவுகளுடன் பேசுவது நன்மை தரும்.
3. எழுதி தகவல் பரிமாறும் திறன்
தகவல் பரிமாற்றத்தை எழுத்துப் பூர்வமாக கொடுக்கும் போது தோற்றம், இலக்கணம், நடை, அளவு போன்ற பல்வேறு காரணிகள் பாதிக்கிறது.
4. பிரசன்டேஷன் ஸ்கில்ஸ்
ஒரு படைப்பை வழங்கும் போது திட்டமிடல், தயாரித்தல் மற்றும் தகவலை வழங்குதல் என்ற முக்கிய மூன்று நிலைகள் உள்ளன. இவற்றில் வாய்மொழி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய படைப்பு என்ற உட்பிரிவுகள் உள்ளன.
5. குழுவாக பணிபுரிதல்
ஒரு குழுவின் ஒரே இலக்கை அடைய வேறுபாடுகளைக் களைந்து, தனி நபர் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒரே அணியில் நின்று பணி புரியும் திறன்.
6. தொழில் ரீதியான கொள்கைகளைக் கடைபிடித்தல்
தொழில் சூழலில் அது குறித்த சிந்தனையை மட்டும் வைத்து பணி புரிய வேண்டும், சுய விருப்பு வெறுப்புகளையும், இதர சிந்தனைகளையும் முற்றிலும் களைய வேண்டும்.
7. தகவல் பரிமாற்ற உறவுத் திறன்
உடன் பணி புரிவோருடன் ஒத்து, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தகவல் பரிமாற்றம் செய்து பணி புரிதல்.
8. நேர மேலாண்மை மற்றும் ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட்
உரிய காலத்தை உபயோகித்து கால அளவிற்குள் பணியை முடித்தல் மற்றும் வேலையின் விளைவாக ஏற்படும் பளுவையும், மன உளைச்சலையும் உரிய விதத்தில் நிர்வகித்தல்.
9. தலைமைப் பண்புகளை வளர்த்தல்
தற்போதைய நிறுவனங்கள் நிர்வாகி என்பதிலிருந்து முன்னேறி தலைமைப் பண்புகளை உடையவர்களை கொண்டிருந்தால் மட்டுமே போட்டியில் நிலைக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
இத்தகைய மென் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நமது பணி எதிர்காலத்தை வளமாக்க முடிவதோடு, கிடைத்த பணியிலும் முன்னேற்றம் காண முடியும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி