தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை அரசுவெளியிட வேண்டியது அவசியம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் உள்ள துறைகள், கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியலை ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு : சமீபத்தில் வேலூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றின் அங்கீகாரம் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. அதனால் அக்கல்லூரியில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறும் அக்கல்லூரி மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நிராகரித்த ஐகோர்ட் நீதிபதி கே.கே.சசிதரன், சட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சில வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
நீதிபதி பரிந்துரை : இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், ஆசிரியர் பயிற்சி கவுன்சில், நர்சிங் கவுன்சில், பார்மசி கவுன்சில் மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்ந்த அனைத்திந்திய கவுன்சில்கள் உள்ளிட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சட்டரீதியான நிறுவனங்கள் வெளியிடுவதில்லை; அக்கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கைகளையும் வெளியிடுவதில்லை; இதனை பயன்படுத்தி சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஏமாற்றுகின்றன; பொது மக்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; தங்கள் பிள்ளைகளை ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கு முன் அக்கல்லூரி குறித்த விபரங்கள் மற்றும் சட்டரீதியான நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும்; சட்டரீதியான நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதுடன், அங்கீகாரம் பெறுவதற்காக மனு தாக்கல் செய்துள்ள கல்லூரிகளின் விபரங்களையும் இணையதளம் அல்லது அறிவிப்புக்கள் மூலம் வெளியிட வேண்டும்; அங்கீகாரம் கோரி மனு தாக்கல் செய்துள்ள கல்லூரிகளின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும்; கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிட்டு தற்போது வரை அனுமதிபெற்றுள்ள கல்லூரிகளின் விபரங்களையும் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
வெளியீட்டிற்கான காலக்கெடு : அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் இறுதி பட்டியலை மாணவர்கள் சேர்க்கை படிவம் சமர்பிப்பதற்கு நிர்ணயிக்கப்படும் கடைசி நாளுக்கு முன்னரோ அல்லது அம்மாநிலம் சார்ந்த பிற பகுதிகளில் சேர்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவோ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக சட்டரீதியான நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அங்கீகாரம் பெறுவதற்கு முன் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் கல்லூரிகள் அல்லது பள்ளிகள் மீது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்படுத்தினால், மாணவர்கள் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளுக்கு சென்று ஏமாறுவதை தடுக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களும் கூடுதல் மாணவர்கள் தேர்வு எழுதுவதை அனுமதிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.