கல்வி உலகில், தொலைநிலை முறையிலான கல்வி என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. சரியான பாடம் மற்றும் பல்கலையைத் தேர்வு செய்வதே, தொலைநிலைக் கல்வியில் முக்கியமான அம்சம்.
மேலும், பாடத்திட்டத்தின் தரம், தேர்வு முறை மற்றும் தேவையான வழிகாட்டல்கள் போன்றவை, தொலைநிலைக் கல்வியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவை.
தொலைநிலை முறையில், உயர்கல்வியை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு, தேவையான விபரங்கள் தெரிவதில்லை மற்றும் கிடைப்பதில்லை. தாங்கள் மேற்கொள்ள நினைக்கும் பாடத்திற்கான உள்ளடக்கத்தின் தன்மை, வருகைப் பதிவு விபரங்கள், பிராக்டிகல் வகுப்புகள் மற்றும் ப்ராஜெக்டுகள் ஆகியவற்றைப் பற்றி போதுமான தெளிவு இருப்பதில்லை.
இதனால், ஏதேனும் ஒரு பல்கலையில், தொலைநிலைக் கல்விக்கு விண்ணப்பித்து, பணம் கட்டி, அதனை வெற்றிகரமாக முடிக்க இயலாதோர் மற்றும் பாதியிலேயே நிறுத்தியவர்கள் பல பேர் உள்ளனர். இந்த நிலைக்கு, அவர்களுக்கு போதிய விபரமின்மை மற்றும் முயற்சியின்மை ஆகிய இரண்டுமே முக்கிய காரணிகளாக உள்ளன.
ஏறக்குறைய, நாட்டில், ஆண்டிற்கு, 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் எளிதான வகையில் உயர்கல்வியை பெறும் அளவிற்கு, போதுமான உயர்கல்வி நிறுவனங்கள் இந்த நாட்டில் இல்லை.
அதிலும், அதிக கட்டணம் மற்றும் பலவிதமான விதிமுறைகள் போன்ற காரணிகள், கணிசமானோரின் நேரடி உயர்கல்வி வாய்ப்புகளை தடுக்கும் முக்கிய காரணிகளாய் உள்ளன. எனவேதான், பட்டப் படிப்பு மேற்கொள்ள நினைக்கும் ஏராளமான மாணவர்களுக்கு, தொலைநிலைக் கல்விமுறை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
மேலும், ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு, தங்களின் பணி அனுபவத்துடன் சேர்த்து, ஒரு மேலாண்மை பட்டப் படிப்பை பெறுவதென்பது, அவர்களின் பதவி மற்றும் சம்பள உயர்வுக்கு ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது. இதுதவிர, இளநிலைப் பட்டப் படிப்பை நேரடி முறையில் முடித்த பலர், பலவித காரணங்களால், முதுநிலைப் படிப்பை, கல்லூரி அல்லது பல்கலை சென்று படிக்க முடிவதில்லை.
எனவே, அதுபோன்ற நபர்களுக்கு, தங்களின் உயர்கல்வி ஆசையை முழுமையாக்க, இந்த தொலைநிலைக் கல்வி முறையே உதவுகிறது. பணி செய்துகொண்டே, முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, அதன்மூலம், பதவி உயர்வை பெற்றுக்கொள்கின்றனர்.
தொலைநிலைக் கல்வி முறையின் மூலம், பலருக்கு பலவிதமான நன்மைகள் கிடைத்தாலும், அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. ஏனெனில், தொலைநிலைக் கல்வி என்ற பெயரில், பல மையங்கள் வழங்கும் படிப்புகள், உரிய அங்கீகாரம் பெற்றிருப்பதில்லை. எல்லாம் பணத்திற்கே என்பதாக அனைத்தும் நடைபெறுகிறது.
எனவே, இளநிலைப் பட்டமோ அல்லது முதுநிலைப் பட்டமோ, அதை மேற்கொள்ள நினைப்பவர்கள், தங்களின் செயல்பாட்டை தொடங்கும் முன்பாக பல விஷயங்களை ஆய்வுசெய்தே தொடங்க வேண்டும். இல்லையெனில், நேரம், பணம் மற்றும் உழைப்பு ஆகிய பலவற்றை வீணாக்க வேண்டிய நிலை ஏற்படும்.