செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்...

இந்தத் தகவல் நிச்சயம் உங்கள் காதுக்கும் வந்திருக்கும். எல்லோரும் செல்போன் பயன்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்தன என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேர் செல்போன் கோபுரங்கள்தான் காரணம் என்று அழுத்தமாகக் கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே சிட்டுக்குருவிகள் அழிந்ததற்குக் காரணம் என்ன? செல்போன் அலைகள் வேறு என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

செல்போன் அலைகள் சிட்டுக்குருவிகளின் முட்டைகளை சிதைப்பதால், அவற்றின் எண்ணிக்கை சரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் சிட்டுக்குருவிகள் அழிவைப் பற்றி பிரபலப்படுத்திய பூனேயைச் சேர்ந்த முகமது திலாவர். மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற சில ஆராய்ச்சிகளை முன்வைத்து அவர் இந்தக் கூற்றை முன்வைத்தார். அந்த ஆராய்ச்சிகள் வல்லுநர்களால் மறுஆய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இல்லை. கேரளம், அசாம் பல்கலைக்கழகங்களும் இதே காரணத்தை முன்வைத்தன.

செல்போன் அலைகள் என்பவை டிவி, மைக்ரோவேவ் அவன் போன்ற வற்றில், வெளியாகக் கூடிய சிற்றலை மின்காந்த கதிர்வீச்சு வகையைச் சேர்ந்தவை. இவை உடல்நலனை பாதிக்கலாம் என்ற குற்றச்சாட்டை சமீபத்திய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. எக்ஸ்ரே கதிர்வீச்சு போன்றவை நீண்டகாலத்துக்கு உடலில் பட்டால், அவற்றிலிருந்து வரும் ஆற்றலை திசுக்கள் கிரகித்துக்கொண்டு மரபணு கட்டமைப்பு மாறக்கூடும். இதனால் உடலில் குறைபாடான வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், நுண்ணலை களோ, ரேடியோ அலைகளோ பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்குத் திறனைக் கொண்டிருப்பதில்லை.

இந்நிலையில் செல்போன் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை பாதிப்பதில்லை என்று கோவை அனைக்கட்டியில் உள்ள சாலிம் அலி பறவையியல், இயற்கை அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி களையும் மேற்கொள்ள இருக்கிறது.

சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும்தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கியக் காரணம்.

நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன. மேலும் இப்போது தானியங்கள் ஞெகிழிப் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளிகன் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது. இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.

எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு செல் போனை வந்தடையும் கதிர்வீச்சோ, செல்போன் கோபுரங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சோ நேரடிக் காரணம் என்று இதுவரை நிறுவப்படவில்லை.

மனிதர்களுக்கு என்ன பாதிப்பு?

சிட்டுக்குருவிகள் இருக்கட்டும். செல்போன் கதிர்வீச்சால், மனித உடல்நலனுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இதுபற்றி இரண்டு விதமான வாதங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன.

செல்போன் கதிர்வீச்சு அதிக காலம் உடலில் படுவதால், மரபணு மாற்றத்தில் பங்காற்றுவதாகவோ, புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்குவதாகவோ இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நிறுவவில்லை. செல்போன் கதிர்வீச்சு, சீரமைக்க முடியாத உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

"நமது மூளைச் செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலை களான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை. செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏன் இதுவரை முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும் சிந்தனைக்குரியது," என்கிறார் புதுவையைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளர்.

செல்போன் நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள் செல்போன் கதிர்வீச்சின் பாதகங்கள் பற்றி போதுமான அறிவியல் ஆய்வுகள் இல்லை என்று கூறினாலும், அதிகப்படியான செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பாக சாதாரண மக்களும் உணரும் விஷயம், கேட்கும் தன்மை.

மேலும், "செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் அவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவிகித நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார், என்று பம்பாய் ஐ.ஐ.டி. மின் பொறியியல் பேராசிரியர் கிரீஷ் குமார் உள்ளிட்டவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்," என்று குறிப்பிடுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. அதேநேரம், செல்போனில் அதிக நேரம் பேசாதீர்கள். ஹாண்ட்ஸ் ஃபிரீ கருவி அல்லது குறைந்த சப்தத்தில் வைத்து பேசுங்கள், நிலவழித் தொலைபேசியில் பேசுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி