வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா?

தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர்.

தற்காலத்தில் திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி வருவோர் பழங்காலத்தில் உரை எழுதியோர் விஷயங்களைத் தள்ளி விட்டு வள்ளுவர்க்குப் புதிய "வியாக்கியானம்" செய்ய முனைந்துள்ளனர். இது தவறு. 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர், அவர் காலத்தில் வழங்கிய நம்பிக்கைகளைக் கூறுவதில் வியப்பில்லை
.
இதோ வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள்:

1. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (குறள்: 969)

தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போல வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் மானம் போகும் நிலை ஏற்படுமானால் கவரிமானைப் போல உயிர் விடுவார்களாம். கவரிமான் இப்படி உயிர் விடுவது உண்மையா? எந்த விலங்கியல் புத்தகத்திலும் இந்தச் செய்தி இல்லை! ஆயினும் அறிவியல் ரீதியில் ஆராயலாமே! கவரிமான் என்பதைச் சட எருமை Yak என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். கம்பரும் இந்த உவமையைக் கையாள்கிறார். "மானம் நோக்கின் கவரி மான் அளைய நீரார்" (கம்பராமாயணம், மந்திரப் படலம் 7) என்று கூறுகிறார்.

2. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து (குறள்: 90)

மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம். அதைப் போல வீடு தேடி வந்த விருந்தினரை "ஏன் வந்தீர்கள்?" என்ற எண்ணத்துடன் பார்த்தாலும் வாடி விடுவார்களாம். இப்படி ஒரு பூ உண்மையிலேயே உள்ளதா? அதன் தாவரவியல் பெயர் (botanical name) என்ன? அதை முகர்ந்து பார்த்தால் வாடும் என்பது உண்மையா?

3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும் (குறல்: 1203)

எனக்குத் தும்மல் வருவது போல இருக்கிறது. ஆனால் உண்மையில் தும்மவில்லை. ஒரு வேளை காதலர் என்னை நினைக்க இருந்து நினையாமல் விட்டு விட்டாரோ என்று காதலி வருந்துகிறாள். இந்தக் குறளில் மட்டுமல்ல. குறள் 1312,1317,1318 ஆகிய மூன்றிலும் தும்மல் பற்றிய தமிழரின் நம்பிக்கை காணப்படுகிறது. அதாவது தும்மல் வந்தால் யாரோ ஒருவர் நம்மை ஆழமாக நினைக்கிறார் என்றும் அவரது எண்ணத்தின் சக்தியே தும்மலை உருவாக்குகிறது என்றும் தமிழர்கள் நம்பினார்கள். இதில் விஞ்ஞான பூர்வ ஆதாரம் இருப்பதாக எந்த ஆங்கில மருத்துவப் புத்தகமும் கூறவில்லை. ஆனால் உலகெங்கிலும் தும்மல் பற்றியும், புரை ஏறுதல் பற்றியும் இப்படி நம்பிக்கைகள் உள்ளன. மேலை நாடுகளில் யாராவது தும்மல் போட்டால், அருகில் உள்ளவர்கள் "கடவுள் காப்பாற்றட்டும்" (bless you) என்றும், இந்தியாவில் "தீர்க்க ஆயுஸ்" (நீடூழி வாழ்க) என்றும் கூறுவர் தும்மலையும் விஞ்ஞான முறையில் ஆராயலாமே.

4. ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 126)

ஆமையானது தனது உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல ஒருவன் ஐம்புலன்களையும் அடக்குவானானால் அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு கிடைக்கும் என்பது இதன் பொருள். ஒரு விந்தை என்னவென்றால் இதே பாடல் பகவத்கீதை (2-58), மனு தர்மசாஸ்திரம் திருமந்திரம், சிவக சிந்தாமணி (2824), கம்பராமாயணம் (சடாயு - 23) ஆகிய அனைத்திலும் உள்ளன. ஆமை தான், உலகிலுள்ள பிராணிகளில் அதிகமான ஆயுள் உடையது (250 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை) என்று கின்னஸ் சாதனை நூல் கூடக் கூறுகிறது. ஆமையின் நீண்ட ஆயுள் ரகசியத்தை அறிந்துதான், வள்ளுவர் இந்த உவமையைப் பயன்படுத்தினாரா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

5. தெய்வம் தொழு‘அள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள்: 55)

கடவுளை விடத் தனது கணவனையே தெய்வமாக வணங்கும் பெண், இயற்கைச் சக்திகளைக் கூடக் கட்டுப்படுத்துவாளாம். அவள் "பெய்" என்று சொன்னால் மழை பெய்யுமாம்! இந்தக் குறளின் கருத்து எவ்வளவு பரவியிருந்தது என்பதற்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே எடுத்துக் காட்டுக்கள். அவ்விரு காப்பியங்களிலும் இந்தக் குறள் வரிகள் உள்ளன!

பத்தினிப் பெண்கள் - கணவனை மட்டுமே வழிபடும் பெண்கள் - சொன்னால் மழை பெய்யுமா? மேகத்தில் ரசாயனப் பொருட்களைத் தூவிச் செயற்கை மழை பெய்வித்ததாய் நாம் அறிவோம். பத்தினிப் பெண்கள் சொல்லி மழை பெய்ததற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் எங்கே?
திருவள்ளுவரின் மனைவி வாசுகியை அவர் அழைத்த போது அவள் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாளாம். வள்ளுவர் கூப்பிட்டவுடன் வாசுகி ஓடி வந்தாளாம். திரும்பிச் சென்ற போது கிணற்றில் குடம், அவர் விட்ட நிலையிலேயே தண்ணீருடன் நின்று கொண்டிருந்ததாம். இவையெல்லாம் அக்காலப் பத்தாம் பசலி நம்பிக்கைகளா? உண்மையா? ஆராயலாமே! "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்பது அக்கால நம்பிக்கை.

6. வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம் (குறல்: 85)

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளயுளும் தொக்கு (குறள்: 545)

வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு உணவு அளித்து விட்டு மிகுதியை உண்பவனின் நிலத்தில் விதையே விதைக்க வேண்டாமாம், தானாகத் தானியம் விளையுமாம். அதே போல அற நூல்களின் படி ஆட்சி செய்யும் மன்னர் நாட்டில் நல்ல மழையும் விளைச்சலும் இருக்குமாம். 559 -வது குறளில் இதை மேலும் வலியுறுத்திச் சொல்கிறார்.

இது உண்மையா? யாராவது ஒரு ஆராய்ச்சியாளர் மழை, விளைச்சல் பற்றி விவரங்களை ஆட்சியாளரின் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிட்டு ஆராயலாமே!

உலகப் புகழ் பெற்ற வட மொழிக் கவிஞன் காளிதாசன் எழுதிய ரகுவம்சம் (5-29/33) என்னும் நூலில் இதைவிட மேலும் ஒருபடி செல்கிறான். அறநெறிப்படி ஆண்டால் தங்கக் காசுகள் மழையாகப் பெய்து கஜானாவை நிரப்பி விடுமாம்.

COURTESY : http://taakkootani.blogspot.in

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி