வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன?

நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் தங்கம், பங்குச்சந்தைகள், மியூச்சுவல் பண்ட், வங்கிகளில் டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்து பெற்ற பலனைவிட ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. எதிர்காலத்திலும் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதன் அபார வளர்ச்சி உணர்த்துகிறது.

முதலீடு நோக்கத்தில் பிளாட் வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்கப் போகும் வீட்டின் விலைக்கும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் எவ்வளவு வாடகை கிடைக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கி வீடு வாங்கினால், வங்கிக்கு அல்லது நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ எவ்வளவு என்று கணக்கிட்டு பார்க்க வேண்டும். 


வாடகை போக குறைந்த அளவு தொகையே நம் கையில் இருந்து கட்ட வேண்டும் என்ற நிலை இருந்தால், வாங்கிப் போடும் பிளாட் நமக்கு லாபத்தை கொடுப்பதாக நினைக்கலாம். பிளாட் உள்ள இடம் எதிர்காலத்தில் எப்படி வளர்ச்சி அடையும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 
வாடகை வீடுகள் அதிகம் தேவை உள்ள பகுதிகளில் முதலீடு நோக்கத்தில் பிளாட் வாங்கினால், நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால், அந்த வீட்டுக்கு உடனடியாக வாடகை கிடைக்கும். இல்லை என்றால், அந்த பகுதி வளர்ச்சி அடையும்போதுதான் வாடகைக்கு குடிவருவார்கள். அதுவரையில் நம் கையில் இருந்து இஎம்ஐ கட்ட வேண்டி வரும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக உள்ளது. புதிய குடியிருப்புகள் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் கட்டப்படும் வீடுகளை விற்பனை செய்ய வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கோயம்பேடு மற்றும் நகரின் முக்கிய இடங்களில் இருந்து வாடிக்கையாளர்களை வாகனங்களில் இலவசமாக அழைத்துச் சென்று வீட்டு மனை, பிளாட்கள் பற்றி விளக்கம் அளித்து, அப்போதே ஸ்பாட் புக்கிங் செய்கின்றனர்.


இதுபோன்று வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியது, என்னவென்றால், அந்த இடத்திற்கு செல்லும் சாலைகள் குறைந்தது 30 அடியாக இருக்கிறதா, லேஅவுட்டின் உள்சாலைகளின் அகலம் 23 அடியாக இருக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வீடுகட்டும்போது, அரசு அனுமதி எளிதில் கிடைக்கும். விற்கும்போதும் நல்ல விலை கிடைக்கும். அந்த வகையில் டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனையாக பார்த்து வாங்கினால் நல்லது.


அங்கீகாரம் பெற்ற மனைகளாக இருந்தால், விலை சற்று கூடுதலாகதான் இருக்கும். அங்கீகாரம் பெறாத மனையாக இருந்தால் அதைவிட குறைவாகத்தான் இருக்கும். ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து மனையை விற்கும்போது, அங்கீகாரம் பெற்ற மனையாக இருந்தால், நல்ல விலை கிடைக்கும். அதுவே அங்கீகாரம் பெறாத மனையாக இருந்தால், வாங்கிய விலையைவிட சிறிதுதான் அதிகரித்து இருக்கும். எனவே வாங்கும்போதே, அங்கீகாரம் பெற்ற மனையாக பார்த்து வாங்கினால், முதலீட்டுக்கு வருமானம் லாபமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


வீட்டுமனை வாங்கும்போது, சாலை வசதி, தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, அந்த பகுதியின் வளர்ச்சி ஆகிய அம்சங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனையின் மார்க்கெட் மதிப்பு லாபகரமாக இருக்கும்.


தெரிந்து கொள்ளுங்கள் பாகம் பிரிக்கப்படாத பங்கு சான்றிதழ்


ஒரு அபார்ட்மென்டில் இரண்டு அங்கங்கள் உள்ளன. கட்டிடம் என்பது ஒரு அங்கம். மேலும் நிலம் (பாகம் பிரிக்கப்படாத பங்கு) என்பது மற்றொரு அங்கம். இந்த அபார்ட்மென்ட் யுகத்தில், கட்டிடப் பகுதி மதிப்பில் குறையும்போது, பாகம் பிரிக்கப்படாத பங்கு நிலம் மதிப்பில் உயர்கிறது. முதல் விற்பனையாக இருந்தால், நடைமுறை விதிகளின்படி, முத்திரைத்தாள், பதிவுக்கட்டணங்கள் ஆகியவை வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் பாகம் பிரிக்கப்படாத பங்கு நிலத்தின் மீது விதிக்கப்படுகிறது. 


விற்பனை பத்திரம் கையெழுத்தாகி நிறைவேறிய பிறகு, உங்கள் பெயரில் பாகம் பிரிக்கப்படாத பங்கு நிலத்தின் உரிமை மாற்றம் செய்யப்பட்டிருப்பதை பிரதிபலிக்கும் ஒரு வில்லங்கம் சான்றிதழ் பெறுங்கள். பாகம் பிரிக்கப்படாத பங்கு நிலத்துக்காக பட்டா பெற முடியாது. வழங்குவோர்: அக்ஷ்யா பிரைவேட் லிமிடெட்


பிரச்னைகளை தவிர்க்க யோசனைகள்:


* வீடு வாங்குவதற்கு முன்பு நமக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பில்டர் (புரமோட்டர்) பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த பில்டர் வேறு ஏதாவது பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுத்து இருந்தால், அதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.


* வீட்டுமனை அமையும் திட்டப் பகுதிக்கு முறையாக உரிமை மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சர்வே எண், யாருக்கு சொந்தமாக இருந்தது. இப்போது உரிமையாளர் யார் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.


* திட்ட அனுமதி முறையாக பெறப்பட்டுள்ளதா, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.


* புரமோட்டர் அந்த இடத்துக்கு முழு உரிமை மாற்றம் பெற்றுள்ளரா அல்லது பவர் மட்டும் வாங்கி வைத்துள்ளரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


* மனையோ அல்லது பிளாட்டோ வாங்கும்போது அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்போது, எல்லா விவரங்களையும் படித்து தெரிந்து கொண்டு கையெழுத்து போடவும். வீடு வாங்குவதற்கு முன்பு பில்டர் உறுதி அளித்த எல்லா வசதிகளும் செய்யப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


* பிளான் அனுமதியில் உள்ளபடி வீடு கட்டப்பட்டிருந்தால்தான் பணி நிறைவுச் சான்றிதழ் எளிதாக பெற முடியும். இந்த சான்றிதழ் பெறவில்லை என்றால், குடிநீர், கழிவு நீர் இணைப்புகள் பெறுவது மிகவும் கடினம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி