சென்னை: பார்வையற்ற மாணவர்களின் போராட்டத்துக்கு எதிரான, போலீசாரின் நடவடிக்கையில் குறுக்கிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பார்வையற்ற வழக்கறிஞர் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தையே, மனுவாகக் கருதி, உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது; அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞராக இருப்பவர், முகமது நஸ்ருல்லா. இவருக்கு, பார்வை கிடையாது. தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர் முகமது நஸ்ருல்லா அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த, 10 நாட்களாக, சில கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்றவர்கள், அமைதியான முறையில், ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பது தெரிந்தும், போலீசார் கடுமையாக அணுகுகின்றனர்; அவர்களை தாக்குகின்றனர். ஆண், பெண்களை போலீசார் கூட்டிச் சென்று, இரவு நேரங்களில் மயானம் அருகிலும், நகரை விட்டு, வெகு தொலைவிலும் விட்டு செல்கின்றனர். போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பெண் ஒருவர் தாக்கப்பட்டதில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும். போலீசார் அராஜகத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். இதில், நீங்கள் தலையிட வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் கடிதத்தை, மனுவாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரணைக்கு எடுத்தது. அரசு தரப்பில், 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்ட, அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, அரசிடம் பதில் பெற, அவகாசம் கோரினார். விசாரணையை, அக்., 3ம் தேதிக்கு, 'முதல் பெஞ்ச்' தள்ளி வைத்தது.
செய்தி : தினமலர்