தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசும்போது எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. படிப்பிற்கு வருடத்திற்கு கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள்.ஆனால் ஆசிரியராக பணி புரிந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வரும் நமது நாட்டில் ஆசிரியர் பட்டப்படிப்பிற்காக வங்கிகள் ரூ.5 ஆயிரம் மட்டுமே கல்வி கடனாக வழங்கி வருகின்றன.ஆனால் ஆசிரியர் பட்டப்படிப்பிற்கு வருடத்திற்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. புனிதமான ஆசிரியர் தொழிலை மேற்கொள்ள விரும்பும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இந்த வங்கிகள் வழங்கும் இந்த சிறிய தொகையை வைத்து எவ்வாறு படிப்பை நிறைவு செய்ய முடியும்.எனவே இந்த ஆசிரியர் நாளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களுக்கு தேவையான தொகையை கல்விக்கடனாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.மேலும் தனது தொகுதியில் உள்ள ஒரு சில வங்கி அதிகாரிகள் கல்விக்கடனுக்காக வங்கிக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் பல்வேறு காரணங்கள் கூறியும் தேவையற்ற ஆவணங்களை அளிக்கக்கோரியும், சொத்துக்களை உத்தரவாதமாக வழங்கக் கோரியும் அலைக்கழிக்கிறார்கள்.ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் வழங்குவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் வழங்க தேவையில்லை என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் அறிவுரையின் பேரில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆனால் பல வங்கி கிளைகளில் சாதாரண தொகை கடனாக வழங்குவதற்கேசொத்து ஆவணங்களும் மூன்றாம் நபர் உத்திரவாதமும் தரவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. குறிப்பாக போடி நாயக்கனூரில் உள்ள பாரத வங்கி கிளையில் ஏழை, மாணவ, மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் கல்விக்கடன் வழங்காமல் பல மாதங்களாக அலைகழிப்பதுடன் மூர்க்கத்தனமாக அவர்களிடம் நடந்து கொள்கிறார்கள்.எனவே அனைத்து படிப்பிற்கான கல்விக் கட்டணத்தையும் கல்விக்கடனாக வழங்கிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு ஆரூண் எம்.பி. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார்.