அரசு வேலைவாய்ப்பிலும் சமநிலை பெற்றுள்ள தொலைநிலைக் கல்விமுறை!

அனைவருக்கும் கல்வி என்பது ஆரம்ப நிலைக் கல்வி என்ற அளவிலும், அதுவும் அமலாக்கத்தில் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இன்றய வாழ்வின் தேவைகளோ, கடை நிலை மனிதன்என்னதான் கல்வியில் உயர்ந்தாலும், கடுமையான போராட்டங்களுக்குப் பின்னரே சில பிடிமானங்களைப் பெறுமளவு ஒரு தேவையற்ற போலித்தனங்களால் வடிவமைக்கப்பட்ட உயரமான மாளிகையாகப் பிரமிக்க வைக்கிறது.இன்றய கல்வி முறை பண்பாட்டையும், இலக்கியங்களையும்,அறிவுசார் கலைகளின் பயன்பாட்டையும் கற்றுத்தருவதைக் காட்டிலும்; ஒரே பொருளின் பல்வேறு பரிமாணங்களைப் பல்வேறு கவர்ச்சியான தலைப்புகளின்கீழ் பயில்வதில்தான் கவனம் கொண்டு திரிகிறது. வர்த்தக மயம் விதிக்கும் விலைவாசி ஏற்றமும், கை நிறைய அள்ளித்தரும் கவர்ச்சியான சம்பளங்களும்தான் இன்றய கல்வித்திட்டங்களை வடிவமைக்கின்றன.


உலகைப் பற்றி அறிந்து கொள்வதைக் காட்டிலும், உலகின் ஒரு பொருள் சார்ந்த பயிற்சி முறையைப் பெறுவதே கல்வி என்றால்;அந்தக் கல்விக்காக மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட கால நேரத்தைக் கல்லூரிகளில் ஏன் விரயமாக்க வேண்டும் என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான முக்கியக் காரணம் அதிகளவில் மாணவர்கள் கல்லூரிகளில் சரியான பயிற்சி கிட்டாமல், தான் தேர்ந்தெடுத்த துறை சார்ந்த படிப்பில் உடனடியாக வேலைக்குச் சென்று அடுத்தவர் உதவியின்றி வேலை பார்க்கும் அளவில் எந்தவிதப் புரிதலோ பக்குவமோ இன்றிக் கையில் பட்டத்துடன் வெளியேற்றப் படுவதுதான் என்றும் சொல்ல முடியும். ஒரு சில கல்லூரிகள் மட்டுமே இந்தக் குறைபாடு இன்றிச் சிறந்த பயிற்சியுடன் மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்து பயில, ஒன்று மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதிகமான பணம் வேண்டும்.


உண்மையில் மாணவர்கள் தமது மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்புக் காலத்தில் அறிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்ற, அறிந்துகொள்ள முடியக்கூடிய கலை / அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகள் நிறையவே இருக்கின்றன. ஆக, நமது கல்வித்திட்டங்கள் இந்த வாய்ப்புகளை அளிக்கும் விதத்தில் இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மருத்துவம் போன்ற குறிப்பிட்ட துறை தவிர்த்து,மாணவர்களின் திறமை அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புக்கு அளவிடப்படும்போது, அவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்க்காமல் எந்த அளவு குறிப்பிட்ட வேலையைத் திறம்படச் செய்வதற்கும் அத்துறையில் மேன்மேலும் முன்னேறவும் இயலக்கூடிய திறமைகளை அந்த மாணவரிடம் கண்டறிய முயல வேண்டும். குறிப்பாக எந்தக் கல்லூரியில் படித்தவர் என்று பார்த்துத் தேர்வு செய்யும் மனப்போக்கு, இன்று வளாகத் தேர்வு (கேம்பஸ் இண்டெர்வியூ) முறையில் வந்துவிட்டது. இது பலவகையில் ஏழை மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.


அதே சமயம், சாமான்யர்களின் தொடர் போராட்டங்களும் வீண்போகவில்லை. சான்றோர்களின் அக்கறை இன்று கடைத்தேறா மக்களைக் கனிவுடன் நோக்குகிறது. கல்வியில் வெகுவாக உயர்ந்துவிட்டவர்கள் அடுத்தவனைக் கைதூக்கி விடுவதைக் காட்டிலும் தனது பெருமைக்கும் தனித்துவத்திற்கும் வலு சேர்க்கும் வகையில் மற்றவர்களுக்கு விதிமுறைகளின் பெயரால் தடுப்புச்சுவர்கள் எழுப்பிய காலம் இப்போது குறையத் தொடங்கிவிட்டது. கல்வியில் இன்று தாராள மயம். அடிப்படைக் கல்விக்கு மட்டுமல்ல, அதனை அடுத்த உயர் கல்விக்கும் இன்று ஏராளமான வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.


இதிகாச காலம் தொட்டுத் துவங்கிய ‘ஏகலைவன்’ பயிற்சி முறை,இன்று அதிகமதிகம் அங்கீகாரம் பெற்று உலகெங்கும் வியாபித்து வருகிறது. தூர நின்று பார்வையால் பயின்ற ஏகலைவன் எத்தனை தேர்வுகளில் வென்று காட்டினாலும் அங்கீகாரம் தர அதிகாரம் படைத்தோர் தயாராயில்லை அன்று. அந்த வழித்தடம் இன்றும் பல கலைகளுக்கும் தடைக்கற்களாய் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் உலகெங்கும் வழிதிறந்து காட்டிய தொலைநிலைக் கல்வி பயிலும் முறை இன்று நன்றாகக் காலூன்றி வளர ஆரம்பித்து உள்ளது.


வெறும் பட்டமும், தாம் பயின்ற கல்லூரியின் பெயரும்தான் என்பதிலிருந்து; தாம் அறிந்து கொண்டு உடனடியாக வேலைக்கு அல்லது சுய தொழில் துவங்கும் முனைப்புடன் தயார் நிலைக்கு வரக்கூடிய குறிக்கோளுடன், உத்வேகமும், படிப்பின்மீது உற்சாகமும் கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்வின் மற்ற அத்தியாவசிய விசயங்களைப் பார்த்துக்கொண்டே இந்தத் தற்காலக் கல்வியையும் கற்பதற்கேற்ப தொலைநிலைக் கல்விமுறை அமைந்துள்ளது.


Distance Learning, eLearning என்றழைக்கப்படும் தொலை தூரக் கல்வி முறை, மின்னணுவியல் / கணினி மூலம் பயிலுதல் ஆகியவை பற்றி உலகெங்கும் கல்வியாளர்கள் மிகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பயனால் பயிற்சி முறையிலும்,பாடத்திட்டங்களை வடிவமைப்பதிலும் பல பயனுள்ள மாற்றங்களைச் செய்வதற்கு உதவியுள்ளனர்.


பிரபலமான தொழில் நிறுவனங்கள், குறிப்பாக கணினித் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள் தொலை தூரக் கல்வி முறையில் பயின்ற மாணவர்களின் அறிவாற்றலுக்கு ஏற்ற மதிப்பளித்து வேலை வாய்ப்புகளில் சம உரிமை தரத்துவங்கியதும் இந்த தொலைநிலைக் கல்வி பயின்ற மாணவர்களின் எதிர்காலத்தில் சுவர்க்கப் பாதைகள் மின்னலடிக்கின்றன.


இன்று, உலகின் தரம்வாய்ந்த பலகலைக் கழகங்கங்கள் அனைத்துமே தொலைநிலைக் கல்வி முறையை மிக நேர்த்தியாக வடிவமைத்து உலகெங்கும் பரப்பி வருகின்றன. பாரதத்திலும், பல பல்கலைக் கழங்கள் இந்த தொலைநிலைக் கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்தாலும், அங்கீகாரம் என்று வரும்போது மாற்றாந்தாய் மனப்பான்மையைத்தான் அதிகார வர்க்கம் இந்த கல்வி முறையில் பயின்றவர்களின் மீது காட்டி வந்துள்ளது.


ஆனால் இப்போது நம்பிக்கை தரும் வகையில் சில முன்னேற்றங்களையும் (வார விடுமுறை நாள்களில் நேர்முகப் பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொள்ள வழி செய்து) ஏற்படுத்தி நேர்முகக் கல்லூரியில் பயிலும் படிப்பும், தொலை தூரக் கல்வி முறையில் பயிலும் படிப்பும், சில பாடத்திட்டங்களைப் பொறுத்து,சமமான நிலையை எட்ட சில பலகலைக் கழங்கள் முன்வந்துள்ளன.


குறிப்பாக மதுரை காமராசர் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பெரும்பாலான இளங்கலை, முதுகலைப் படிப்புகள் இவ்வகை சமமான மதிப்பீட்டைத் தரும் என்று உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களில் அமைந்துள்ள படிப்பகம் (study centre)இந்தப் பல்கலைக் கழகத்தின் தொலைத் தொடர்புக் கல்வி மாணவருக்கு சனி, ஞாயிறு வகுப்புகளை நடத்தி வருகிறது.


இன்றய நிலையில், தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு தாலுகா அளவில் மின் நூலக வசதியுடன் கூடிய பயிலகங்களை அமைத்திட வழிவகுத்து, அவற்றிலிருந்து அளிக்கப்படும் பல்கலைக் கழகத்தின் வாராந்திரப் பயிற்சிகளின் மூலம், கீழ்கண்ட வசதிகளை ஒவ்வொரு மாணவரும் பெறச் செய்து; அவர்களின் கல்லூரிக் காலக் கனவுகளை ஈடு செய்துவிடுவதுடன் அதனினும் சிறப்பான எதிர்காலத்தையும் கொடுத்துவிட முடியும்.


1. உயர்தரமான ஆசிரியர்களைக் கொண்டு, பட்டப் படிப்பின் பாடத்திட்டங்களுக்கேற்ப, மாணவர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் எழுதப்பட வேண்டும்.


2. பாடத் திட்டங்களைப் புரிந்துகொள்ளவும், கணினி மற்றும் வணிகவியலில் பயன்படும் செயல்முறை மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளை அறிந்துகொள்ளவும், ஒரு துறையின் ஒழுங்கமைப்பு வடிவங்களைப் புரிந்து பயன்படுத்தவும் தேவையான பழகுப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வாரந்திர நேர்முக வகுப்புகளில் முதல் கட்டத்திலேயே அளித்து அவர்கள் சுயமாகப் பாடங்களைப் படிக்கும் தன்னம்பிக்கையை வளரச்செய்ய வேண்டும்.


3. ஒவ்வோர் ஆண்டும் மாணவருக்கு ஒதுக்கப்படும் தனிமுறைப் பயிற்சிகள், வீட்டுப் பாடங்கள் போன்றவற்றிற்கான கால அட்டவணையை மாணவர்கள் தாமே தயார்செய்து கொண்டு அதன்படி குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கும் வகையில் ஒழுங்கான திட்டமிடலுக்கு வழிவகுத்து, தேவையான பாடங்கள் அனைத்தையும் முன்பே அளித்துவிடவேண்டும்.


4. இணையதளத்தில் பதிவிரக்கம் செய்யவும், மின்னஞ்சல் மூலம் பாடங்களைப் பெறவும், பயிற்சி வினாவுக்கான விடைத்தாள்களை அனுப்பவும் வசதி செய்து கொடுக்க வேண்டும். இணையதள வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு அருகிலுள்ள பயிலகங்களில் / நூலகங்களில் இணையதள இணைப்பை இலவசமாக பெற்றுப் பயனடையும் வசதிகளை செய்துதர வேண்டும்.


5. பாடம் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், தொடர்புடைய தகவல்களைச் சக மாணவர்களும், ஆசிரியர்களும் பரிமாறிக் கொள்ளும் வகையில், இணையதள மன்றங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த மன்றங்களில் நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்களைக் கண்கானித்து நெறிப்படுத்த தக்க கல்வியாளர்களையும் நியமிக்க வேண்டும்.


6. சாத்தியமான இளங்கலைப் படிப்புகள்:
B.A. Tamil / English / History / Economics / Co-operation; BBA / B.Com. / B.Sc. Maths
B.C.A. / B.Sc. computer science / IT / visual communication / Physics; B.L.I.Sc. etc.


7. சாத்தியமான முதுகலைப் படிப்புகள்:
M.B.A. M.C.A. M.Sc. maths/software technology/eCommerce/IT/electronics
M.A Tamil/English/History/Economics/Public Administration/Journalism and Mass communication/philosophy
M.Com (special subjects in bank management/financial management/computer applications)


8. இன்னும் பல சான்றிதழ் பாடங்களும் இம்முறையில் சுலபமாகவும் சரியான தரத்திலும் பயில வகைசெய்து கொடுத்தல். மேலும் குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களின் (எ-கா: Microsoft professional certification examination courses – MCP, MCSA, MCSD etc.)தேர்வு முறைக்கு பயிற்சியளிக்கும் விதத்தில் இந்தப் பயிலகங்கள் இருக்கவேண்டும். நாம் அளிக்கக் கூடிய பயிற்சி தரமானதாக இருந்தால், மாணவர்கள் தாமே மேற்குறிப்பிட்ட சான்றிதழ் தேர்வுகளில் கலந்து தேறி வேண்டிய தகுதிச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


எல்லாம் சரி, எனக்குத் தொலைநிலைக் கல்விமுறை சரிப்பட்டு வருமா என்று சந்தேகிக்கிறீர்களா?. உங்கள் சந்தேகம் ஆரம்பக் கட்டத்திலேயே ஏற்படுவதுதான் மிகச்சிறந்தது. ஆனால், நீங்களே சுலபமாக அதற்கு விடை காணவும் முடியும்:


கீழ்க்கண்ட பண்புகள் உங்களுக்குப் பெரும்பான்மையாக இருந்தால், நீங்கள் தயக்கமின்றி மேற்கூறிய படிப்புகளுக்குத் தொலைநிலைக் கல்வி முறையைத் தேர்வு செய்யலாம்:


தன்முனைப்பும், சுய தூண்டுதலும், உள உறுதியும் ஆர்வமும் உள்ளவர் (self-starter with solid personal motivation)


படிக்கும்போதே புரிந்துகொள்ளும் தன்மையுள்ளவர் (learn best when reading a material)


நன்றாக உழைப்பவர், இலக்கை முந்துபவர் (a worker, who usually meet or beat deadlines)


எழுத்தில் கொடுக்கப்படும் குறிப்புகளையும், விதி முறைகளையும் நன்றாக விளங்கிக்கொள்ளும் தன்மையுடையவர் (figure out instructions on his/her own)


பொறுமையும், தேவையான அளவு காத்திருத்தலுக்கும் (பயிற்சி விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும்வரை) சம்மதிப்பவர் – -
கிடைக்கும் மற்ற நாள்களின் பெரும்பாலன நேரத்தை வீட்டுக்காக உழைப்பதற்கும் அல்லது வேலைக்குச் செல்லத் தேவையான மற்ற தகுதிகளை வளர்த்துக் கொள்வதை விரும்புபவர்.


இந்தப் படிப்புக் காலத்தில் கிடைக்கும் தாராளமான நேரங்களை கீழ்கண்டவாறு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்:


பகுதி நேர வேலைகள் பார்த்துக் குடும்பத்திற்கு வருமானம் தேடிக்கொள்வது


பட்டயப் படிப்பு முடிந்த உடனேயே வேலையில் அமர்ந்து திறமையாக வேலை பார்க்க அல்லது சுயதொழில் செய்ய உதவும் பல்வேறு தொடர்புடைய தகுதிகளையும் வளர்க்க உதவும் பயிற்சிகளை மேற்கொள்வது.


மொழிப் பயிற்சி [எ-கா. spoken English, Hindi, Arabic), கணினிப் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, கணக்காளர்/தணிக்கையாளர் பயிற்சி (CA, ICWA intermediate and/or final courses) மேற்கொள்வது.


ஒரு மாணவர் தனது படிப்புத் திறனையும், வாய்ப்புகள் வரும்போது பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளின் மூலம் பெரும் வலிமையுடன் தனது வேலை தேடுவதையோ அல்லது சுயதொழில் துவக்குவதையோ நாடாமல், ஒரு கல்லூரி நிறுவனம் பெற்றிருக்கும் பெயர் ஒன்றுக்காகவே ஏராளமான பணத்தைக் கொட்டி அதில் சேர்வது என்பது தேவைதானா?. (கேம்பஸ் இன்டர்வியூ கிடைக்கிறது என்ற தூண்டிலில் சிக்காமல் உண்மையான தரமான கல்வியை ஒரு நிறுவனம் வழங்குகிறது என்ற அடிப்படையில் ஒரு கல்லூரியில் சேர்பவர்களை இங்கே குறிப்பிடவில்லை.)


இன்று தரமான தொழில் நுட்ப நிறுவனங்கள் அளிக்கும் தகுதித் தேர்வுச் சான்றிதழ்கள் அதிக அளவு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருகின்றன. பட்டங்களைப் பொருத்து, எந்தக் கல்லூரி என்று பார்க்கும் வழக்கமும் இப்போது குறைந்துவிட்டது. ஆகவே,குறிப்பிட்ட அறிவியல் திறனை நீங்கள் உங்களுக்கு அருகிலேயே பெறமுடிந்தால், அதன் தொடர்புடைய பயிற்சிகளை நீங்கள் சிறப்பாகப் பெற முடிந்தால், அதுவே உங்களுக்குச் சுலபமான வழியாகும். நீங்கள் கல்லூரிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும்போது, உங்களை நோக்கி வரும் வாய்ப்புகளைக் காணத் தவறவேண்டாம்.


மதுக்கூர் என்.எஸ்.எம்.ஷாகுல் ஹமீது

Source : http://tntam.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி