பட்டம் பெற்றவருக்கு, சரியான வேலை கிடைக்காததற்கு, படித்த கல்வி நிறுவனத்தை குறை சொல்லக் கூடாது;என, தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் கமிஷன் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், தன் மகனை, உத்தர பிரதேசத்தின் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில், பி.எட்., படிக்க சேர்த்தார். படித்து முடித்து, பட்டம் பெற்ற பிறகும், அவரின் மகனுக்கு, அந்த சான்றிதழால் வேலை கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அந்த நபர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் முறை யிட்டபோது, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர், தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷ னில் முறையீடு செய்து, தான் செலுத்திய, கல்விக் கட்டணம், 40 ஆயிரம் ரூபாயை திரும்பத் தரஉத்தரவிட வேண்டும் என, கோரினார்.
இந்த வழக்கு, நீதிபதிகள், அஜித் பாரிகோக் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகியோர் முன் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றதால்மட்டும், ஒருவருக்கு வேலை கிடைத்து விடாது. வேலை கிடைக்க வேண்டுமென்றால், அதற்காக சிறப்பு தகுதிகளை அந்த நபர் வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
வெறுமனே, சான்றிதழை மட்டும் காட்டி, வேலை தருமாறு கோர முடியாது. அந்த கல்வி நிறுவனம் வழங்கிய சான்றிதழை, வேலைவாய்ப்பு வழங்கும் பள்ளிகள் ஏற்றுக் கொள்ளாதது, அந்த கல்வி நிறுவனத்தின் குற்றமல்ல. அத்தகைய கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்த, மனுதாரரின் தவறு.எனவே, அவரின் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது. வேலை கிடைக்காததற்கு, அந்த நிறுவனத்தை குற்றச்சாட்ட முடியாது.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவி ல்கூறியுள்ளனர்.