தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது.

3½ லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் ஆயிரம் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேர் படிக்கிறார்கள். மேலும் தொலை தூரக்கல்வி மூலம் 4 லட்சம் பேர் படிக்கிறார்கள்.


இந்த மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறி அதை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் முன்பாக போராட்டம் நடந்தது.
இது குறித்து மாநில உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் கூறியதாவது:-

கட்டண உயர்வு நிறுத்தம்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். மேலும் கேள்வித்தாள் உள்ளிட்டவைக்கும் செலவு அதிகமாகிறது. எனவே தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் உயர்த்த அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநில உயர்கல்வி மன்ற கூட்டம் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சில பல்கலைக்கழகங்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

இறுதி முடிவு
உடனடியாக விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு கட்டணஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கரு.நாகராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் வருகிற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மாணவர் நலன் கருதிய முடிவாகத்தான் இருக்கும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி