தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி.,

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள், தொலைதூர கல்வி முறையில் படிக்கின்றனர்.


தமிழகத்தில், அண்ணாமலை, மதுரை, திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, பத்து பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி வழங்கப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில், இளங்கலை, முதுகலை ஆய்வு படிப்புகளும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ஆண்டிற்கு 500க்கும் மேற்பட்ட ஆய்வு பட்டங்கள் வழங்கப்பட்டன. தரம் குறைந்த கல்வி வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தொலைநிலை கல்வியில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் வழங்க தடை விதித்தது. இதையடுத்து, 2008 முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும், தொலைதூர கல்வி மூலம் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டம் வழங்குவது தடை செய்யப்பட்டது.

நேரடி பட்டம் : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நேரடியாக எம்.பில்., மற்றும் பி.எச்டி., வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பல்கலையில், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், உளவியல், கல்வியியல், குற்றவியல் உள்ளிட்ட, 14 துறைகளில், ஆய்வு படிப்புகள் துவங்கப்படுகின்றன. 

ஆண்டு கட்டணம், 5,000 ரூபாய். இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர், 5ம் தேதி. 

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறியதாவது: திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்தால், வேலை கிடைக்காது என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. இக்கருத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு, பல்கலைக்கழகத்தின் முன் பெரும் சவாலாக உள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள நேரடி ஆய்வு பட்டம், பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கு பெரிதும் உதவும். உளவியல், பொது அரசியல் உள்ளிட்ட அரிய பட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம், ஆராய்ச்சி பட்டத்தை மாணவர்கள் இங்கு எளிதில் மேற்கொள்ள முடிகிறது. எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற தகுதியானவர்களுக்கு, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும். இவ்வாறு, சந்திரகாந்தா கூறினார்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி