கருணை வேலைக்கு 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று கூறி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் நடவடிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா ஆவாராம்பட்டி அருகே உள்ள ஆலாத்தூரை சேர்ந்தவர் எழுமலை. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
என் தந்தை செல்லன், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பாட்னாபட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 1994–ம் ஆண்டு பணியில் இருக்கும் போது இறந்து போனார். அந்த சமயத்தில் நானும்,எனது சகோதரிகளும் மைனராக இருந்தோம். இதனால், எனது தாயார் கருணைவேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்தார். ஆனால், அவரது மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.நிராகரிப்பு இதன் பின்பு, எனது சகோதரி ரேணுகா கருணை வேலை கேட்டு 1999–ம் ஆண்டு மனு கொடுத்தார். வேலை நியமன தடை சட்டம் அமலில் இருந்ததால் எனது சகோதரிக்கு வேலை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நான், உரிய கல்வித்தகுதியை பெற்றதால் 2007–ம் ஆண்டு வேலை கேட்டு மனு கொடுத்தேன்.எனது தந்தை இறந்து 3 ஆண்டுகளுக்குள் நான் விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்து 2.7.2007 அன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
எப்படி சரியாக இருக்கும்?
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகிவாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–
கருணை வேலை கேட்டு மனு கொடுப்பவர் மைனராக இருக்கும் போது, 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும். வேலை பெறுவதற்கான வயதை அடையும் போதுதான் மனு கொடுக்க முடியும்.வேலை வழங்க வேண்டும் மனுதாரரை பொறுத்தமட்டில் அவருடைய தாயார், சகோதரி ஆகியோர் வேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்த விண்ணப்பம் 3 ஆண்டுகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளார்.ஆனால், அதிகாரிகள் மனுதாரர் 3 ஆண்டுகளுக்குள் வேலை கேட்டு மனு கொடுக்கவில்லை என்று கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துஉள்ளனர். இது சரியான நடைமுறை அல்ல. எனவே, மனுதாரருக்கு கருணை வேலை வழங்க மறுத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு கருணை வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.