சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.நாகப்பன் 19-ந்தேதி பதவி ஏற்பு


சென்னை, செப்.17- ஓடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் சி.நாகப்பன். இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அவர் 19-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதியாக பி.சதாசிவம், நீதிபதியாக எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் உள்ளனர். இப்போது, மூன்றாவதாக நீதிபதி சி.நாகப்பன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்பதால், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

நீதிபதி சி.நாகப்பன் 4-10-1951 அன்று கரூரில் பிறந்தார். இவரது தந்தை வி.என்.சொக்கலிங்கம் கரூரில் மிகப்பெரிய தொழில் அதிபர். இவரது தாய் வைரம் சொக்கலிங்கம். இவர்களுக்கு மூத்த மகனாக பிறந்த நீதிபதி நாகப்பன், கரூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி. முடித்துவிட்டு, மதுரையில் உள்ள மதுரை கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். சட்டப்படிப்பில் சேர்ந்து, 1974-ம் மூன்றாவது இடத்தில் தேர்ச்சிப் பெற்றார். முதுகலை சட்டப்படிப்பான எம்.எல். படிப்பில் 1977-ம் ஆண்டு தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

மூத்த வக்கீல் கே.பராசரனிடம் ஜூனியராக சேர்ந்த நாகப்பன், சென்னை சட்டக்கல்லூரியில் கவுரவ பேராசிரியராக 7 ஆண்டுகள் பணி செய்தார்.

மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் தேர்ச்சிப் பெற்று, 1987-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 27-9-2000 அன்று சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார். 20-9-2002 அன்று நிரந்தர நீதிபதியானார்.

ஏறக்குறையாக 13 ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி சி.நாகப்பன், கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஓடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

நீதிபதி சி.நாகப்பனுக்கு, சுபா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி