
பெங்களூர்: சென்னையைச் சேர்ந்த 14 மற்றும் 12 வயது சகோதரர்கள் உருவாக்கிய அப்ளிகேஷன்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கிறது. சென்னையைச் சேர்ந்தவர் ஷ்ராவன் குமரன்(14). அவரது தம்பி சஞ்சய் குமரன்(12). அப்ளிகேஷன்களை உருவாக்கித் தரும் கோ டைமன்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஷ்ராவன். அதே நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய். அவர்கள் இந்த நிறுவனத்தை தங்கள் வீட்டில் 2ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினர். இந்தியாவின் இளம் தொழில் அதிபர்களாக இந்த சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள வேல்ஸ் பில்லபாங் சர்வதேச பள்ளியில் ஷ்ராவன் 9ம் வகுப்பிலும்,சஞ்சய் 7ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இந்த சகோதரர்களின் தந்தை குமரன் சுரேந்தர் சைமன்டெக் நிறுவனத்தின் ஆன்ட்டி வைரஸ் மற்றும் செக்யூரிட்டி சொலுஷன்ஸ் டைரக்டர். தாய் ஜோதி லக்ஷ்மி முன்னாள் பத்திரிக்கையாளர். புரோகிராமிங் கற்றுக் கொள்ள, கேட்ஜெட்டுகளுடன் விளையாட தங்களை ஊக்கப்பட்டுத்தியதே தங்கள் தந்தை தான் என்கின்றனர் இந்த சுட்டிப் பையன்கள்.