தமிழகம் முழுவதும் 244 மையங்களில் 5,566 பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடந்தது. 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 3,469, இளநிலை உதவியாளர் (பிணையம்) 62, வரி தண்டலர் (கிரேடு1) 19, தட்டச்சர் 1,738, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 2) 242, நில அளவர் 6, வரைவாளர் 30 என 5,566 காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
தேர்வுக்கு 17,06,552 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதில் தகுதியில்லாதவர்கள் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் என 3,01,899 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14,04,653 பேர் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
இதற்காக மாநிலம் முழுவதும் 244 மையங்களில் 4,755 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் 4,755 முதன்மை கண்காணிப்பாளர், 70,230 கண்காணிப்பாளர், 4,500 ஆய்வு அலுவலர், 950 பறக்கும் படை அதிகாரிகள் என மொத்தம் 83,985 அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தேர்வு கூடத்துக்கும் ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டனர்.
இதுதவிர அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்ய துணை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொலை தூரங்களில் உள்ள தேர்வு கூடம் மற்றும் பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ள தேர்வு கூடங்கள் அனைத்தும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்களுக்கு வசதியாக கூடுதலாக பஸ்களும் இயக்கப்பட்டன. காலை 10.30 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு கூடத்துக்குள் செல்போன், கால்குலேட்டர், லேப்டாப், புளுடூத் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. பிட் அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வாளர்களின் விடைத்தாள் செல்லாததாக ஆக்கப்படும். தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகள் எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.