ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் விவாகரத்தான மனைவிக்கும் பென்ஷன் தொகை உண்டு
"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை, அவரின் விவாகரத்தான, முறைப்படி இல்லாமல், சேர்த்துக் கொண்ட பெண்ணின் வாரிசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. "ஆல் இந்தியா சர்வீசஸ்' என்றழைக்கப்படும், நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், பணியில் இருக்கும் போது இறந்தாலோ அல்லது ஓய்வுபெற்ற பிறகு இறந்தாலோ, அவர்களின் மனைவி அல்லது சட்டபூர்வமான வாரிசுகளுக்கு மட்டுமே, பென்ஷன் பலன்கள் வழங்கப்படுவது, இப்போது நடைமுறையில் உள்ளது. இதில், மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. அதன் படி, அந்த அதிகாரியின் விவாகரத்தான மனைவி அல்லது அவர் சேர்த்துக் கொண்ட பெண்ணின் வாரிசுகளுக்கும், பென்ஷன் தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என, தெரிவித்துள்ளது.
இதற்காக, அனைத்திந்திய பணிகள் (இறப்பு மற்றும் பணிஓய்வு பலன்கள்) விதிகள், 1958ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் படி, அந்த அதிகாரிக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அவர்களுக்குள் ஓய்வூதியப் பலன்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அது போல், அத்தகைய அரசு அதிகாரிக்கு, மனவளர்ச்சி குன்றிய அல்லது செயல்படாத நிலையில் உள்ள வாரிசுகள் இருந்தால், அவர்களுக்கும் குடும்ப பென்ஷன் வழங்கப்பட வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், 80 வயதை தாண்டியிருந்தால், அவர்கள் பெரும் பென்ஷனில், கூடுதலாக, 20 சதவீதம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, 85 வயதை தாண்டியிருந்தால், 30 சதவீதமும், 90 வயதுக்குப் பிறகு, 40 சதவீதமும், 95 வயதுக்குப் பிறகு, 50 சதவீதமும், 100 வயதுக்கு மேல் வாழ்ந்தால், 100 சதவீத பென்ஷன் கூடுதலாக வழங்க வேண்டும் என, புதிய விதிமுறைகள் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.