ஒரு ஆசிரியரின் பள்ளி அனுபவம் - இ.சாக்குலின் சுபாசினி


ஒரு ஆசிரியரின் பள்ளி அனுபவம்-
இ.சாக்குலின் சுபாசினி 

முன்னுரை:
அரிது அரிது மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பதற்கேற்ப ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் அறிவு விளக்கம் பெற வேண்டும்.

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391)

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப கற்கத் தகுந்த நுல்களைக் குற்றமின்றி கற்று, அக்கல்வியை தன்னலமின்றி பிறருக்கு கற்றுக் கொடுப்பதே ஆசிரியர்களின் குறிக்கோள். உலகில் மக்கள் செய்யும் தொழில்கள் பல காணப்பட்டாலும், ஆசிரியர் தொழிலே சிறந்தது. இதற்கு இணையான தொழில் வேறொன்றில்லை. மக்களின் அறியாமையை நீக்குவதால்தான் ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கே தன்னை அர்ப்பணி , இப்பணி தியாகப்பணி, தெய்வீகப் பணி, சமூகப் பணி என்று எல்லோராலும் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற கருத்தை மனதில் கொண்டு பணியாற்றுகின்றனர். தற்போது ஆசிரியர்களின் நிலைமை என்ன? இக்கட்டுரையில் காண்போம்.

அன்றைய காலத்தில் ஆசிரியர் நிலை:

அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களைக் கண்டாலே மாணவர்கள் மரியாதையுடன் போற்றினர். தனது பெற்றோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் குருவை (ஆசிரியரை) தெய்வத்திற்கும் இணையாக வணங்கி அவர்களின் அறிவுரைகளை ‘பசுமரத்தாணி போல’ மனதில் பதித்து வாழ்ந்தனர்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு 

என்பதைப் போல தனக்காக வாழாமல் மாணவர்களுக்காக வாழும் தன்னலமற்ற ஆசிரியர்களின் பணி மகத்தானது. ஆசிரியர்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் தலைநிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் வெட்கத்தால் நாணி நிற்கும் மாணவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களை வெற்றிப் பாதையில் செலுத்தும் சிறந்த வழிகாட்டிகள் ஆசிரியர்கள். இன்றளவும் மாணவர்கள் மனதில் அழியாமல் நிற்கும் சிகரங்கள் ஆசிரியர்களே. உண்மையிலேயே தாய்க்கும், பிள்ளைக்குமான உன்னதமான நிமைமை அன்று…

இன்றளவில் ஆசிரியர் & மாணவர் உறவுநிலை:

இப்பொழுதோ பள்ளிகளில் மாணவர்களைக் கண்டால் ஆசிரியர்கள் பயப்படும் நிலையாகிவிட்டது. மரியாதை என்பதை மாணவர்களிடம் இருந்து பிச்சை கேட்கும் நிலைக்கு ஆசிரியர்களின் நிலை சீர்குலைந்துள்ளது. 75% மாணவர்களிடம் ஒழுக்க நிலையை காண்பது அரிதாகியுள்ளது. இன்றைய மாணவன் தவறு செய்யும் போது, அதைச் செய்யாதே என்று ஆசிரியர் கூறினால், அதை அவன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவனுக்காக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலே நிலவுகிறது. அவர்களின் தவறுகளைக் கண்டித்தால் மாணவர்களால் வெறுக்கும் நிலைக்கு ஆசிரியர்களின் பரிதாப நிலை அமைந்துள்ளது. மாணவர்கள் ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்களைக் கொண்டவராக உள்ளனர். கல்வியே அழியாச் செல்வம் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் கல்வியைக் கற்பது அவசியம் என்று கூறினால் ஆசிரியர்களை மாணவர்கள் வெறுக்கின்றனர். ஆசிரியர்களிடம், பாடப்பகுதியைப் பற்றி விரிவாகப் பேசுவதைவிட, மற்ற பொழுதுபோக்கு விசயங்களைப் பேசவே நினைக்கின்றனர். அமைதியாக இருக்கும் ஆசிரியர்களையே கொலை புரியும் மாணவர்கள் இருக்கும் நிலையில் மாணவர்களிடம் எங்கே கண்டிப்புடன் செயல்வடுவது. அவர்களைக் கண்டாலே பயம்தான் 

அசிரியர்களுக்கு… ஏன் இந்த நிலை?
பெற்றோர் & பிள்ளை (மாணவர்) உறவு நிலை : 

தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும், பிள்ளைகளைப் படிக்க வைக்க, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் தேவை. அவற்றைச் சம்பாதிப்பற்கு முயற்சி செய்வது தவறு இல்லை அதே நேரத்தில் தங்களின் பிள்ளைகளிடம் நேரத்தை செலவிட மறுக்கின்றனர். குழந்தைகளின் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்து கொள்ள நேரம் கிடைப்பதில்லை.

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்’

உயிரைவிடவும் மேலானதாக கருதப்படும் ஒழுக்கத்தை முதலில் கற்றுக் கொடுக்கும் குருக்களே பெற்றோர்கள். இதனை அவர்கள் உணர மறுக்கின்றனர். அலுவலகத்தில் அடுத்தவரின் வாழ்க்கை உயர்வுக்குப் பாடுபடும் பெற்றோர், தங்களின் வாழ்க்கையைக் காக்கவிருக்கும் பிள்ளைகளைப் பற்றி ஏன் அக்கறை கொள்வதில்லை. தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்க்க நேரத்தை செலவிடும் அவர்கள் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து அவர்களை உற்சாகப்படுத்தி வெற்றிக்கு வழிகாட்ட மறுக்கின்றனர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பிள்ளைகள் மீது இஷ்டம் இல்லாத காரணத்தால் ‘டியூஷன்’ என்ற பெயரில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு செலவிட நினைக்கின்றனர். மாணவர்களின் மனக்கருத்துகளை கேட்பதில்லை. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே பிளவு காணப்படுகிறது. சில மாணவர்களுக்குத் தங்களின் பெற்றோர் எங்கு பணிபுரிகின்றனர், ஊதியம் எவ்வளவு என்பது கூட தெரியாத நிலை உள்ளது. தங்களின் பெற்றோருக்கு பகுதி நேர வேலை என்றால் சொல்லத் தேவையே இல்லை. பிள்ளைகள் தங்களின் பெற்றோரைக் காண்பது கூட அரிதான ஒன்றாகிறது.

மாணவர்களின் மனக்குமுறல்களில் ஆசிரியர் பங்கு:

மாணவர்களைப் போலவே கல்வி முறையிலும், அதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமும், சில குறைகள் உண்டு. ஆசிரியர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் மாணவர்களை எந்நேரமும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அதுவும் தவறுதான். மாணவர்கள் வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை அவர்களே உணரும்படியான சூழலை அவர்களுக்கு முதலில் உருவாக்கித் தர வேண்டும். அவர்களும் மனிதர்களே என்பதை உணர வேண்டும்.
‘ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா….’ -என்ற
பாரதியின் பாடலுக்கேற்ப பள்ளிகளில் பள்ளி நிர்வாகமும், நிர்வாகத்திற்கு இணங்கி நடக்கும் ஆசிரியர்களும் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. இன்றைய சூழலில் பிள்ளைகள் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.காரணம் படிப்பு, தேர்வு, மதிப்பெண் எனப்பல காரணங்கள். குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை பரிதாபதிற்குரியது. அதைவிடக் கொடுமையானது அடுத்த வருடம் பொதுத் தேர்வு எழுதுவதற்கு இந்த வருடமே முன்னதாக பாடங்களை எடுப்பது, மாணவர்களை மிகுந்த மனக்குழப்ப நிலைக்கு தள்ளுகிறது. மாணவர்களுக்கு படிப்பின் மீது சலிப்பு ஏற்படுகிறது. அந்தப் பாடங்களையும் அவர்களால் சரியாகப் படிக்க முடிவதில்லை.

மாணவர்களுக்கு ஆசிரியர்களே எதிரி:

பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர், மாணவர்களிடம் பாரபட்சம் காட்டுகின்றனர். இதுவும் மாணவன் சீரழிவுக்கு முக்கிய காரணம். அதிக மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடையாத மாணவன், திருந்திப் படித்து தேர்ச்சி அடைவதற்கு முயன்றால் அதை சில ஆசிரியர்கள் ஏற்க மறுக்கின்றனர்.காரணம் ஒருமுறை மாணவன் செய்யும் தவற்றை மனத்தில் கொண்டு அவன் கடைசிவரை இப்படித்தான் என்ற முடிவுக்கு வருகின்றனர் , பிறகு என்ன, அந்தக் குறிப்பிட்ட மாணவன் பின்னாளில் தவறே செய்யாவிட்டாலும் கூட இந்த ஆசிரியர், அம்மாணவனை ஒதுக்கும் சூழல் உருவாகி வருகிறது . மாணவன், தன்னிடம் ஆசிரியர் கண்ட குறைகளைத் திருத்திக் கொண்டாலும் காரணமே இல்லாமல் அவனை வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவரும் நிலையிலே சில ஆசிரியர்கள் உள்ளனர்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

ஆசிரியர்கள் சிலர் மாணவர்களைச் சபிக்கின்றனர். தங்களின் பிள்ளைகளைப் போல நினைக்க வேண்டிய மாணவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் சபிக்க வேண்டாம். எனென்றால் நாம் சபித்த மாணவன் நாளை உயர் பதவி வகிக்கும் சூழலில் இவ்வாசிரியர் அம்மாணவனை நேரில் சந்திக்கும் சூழலில் கோபத்தால் திட்டிய நம்நிலை என்ன? என்பதனை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாணவர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பினை அளிக்க வேண்டும்.

மாணவர்கள் பெற்றோரிடம் கிடைக்காத அன்பைத்தேடி அலையும்போது ஆசிரியர்கள் திட்டிய வார்த்தைகள் அவன் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.இப்படித்தான் முன்னாள் மாணவர் ஒருவரை நான் சந்தித்த போது அவன் சொன்னான் “ மிஸ் என்னைய அப்போ அடிச்ச அந்தக் கணக்கு வாத்தியார நான் எங்க பாத்தாலும் அடிப்பேன். அவரால நான் மனரீதியா பட்ட வேதன இன்னும் ஆரல” என்றான். இப்படித்தான் இன்றைய ஆசிரியர்கள், மாணவர்களால் அதிகமாக வெறுக்கக் கூடிய நிலைக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாகின்றனர். அந்த ஆசிரியர்கள். மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் எதிரிகளாகவே மாறுகின்றனர். அதனால் ஏற்படுவதுதான் ஆசிரியர் கொலை, வெற்றிப்பாதைக்கு அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை மாணவர்களைப் பாதாளத்தில் தள்ள வேண்டாமே…
மாணவர்களின் சீரழிவுக்கு பெற்றோரின் பங்கு:
இன்றைய பெற்றோர் தன் பிள்ளைகள் சந்தோசமாகவும் கௌரவமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு குடும்பக்கஷ்டம் தெரியாமல் வளர்க்கின்றனர். அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தைக் கொடுத்துக் கெடுக்கின்றனர். தங்களின் பிள்ளைகள் சமுதாயத்தின் முன்பாக அனைத்தும் தெரிந்தவனாக விளங்கவேண்டும் என்பதற்காக கணிப்பொறி, கைப்பேசி, போன்றவற்றை இயக்க கற்றுக் கொடுப்பதொடு, அதிக விலைக்கு வாங்கித்தருகின்றனர். இந்நிலையானது மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

இன்று கைப்பேசி இல்லாத மாணவர்களே இல்லை எனலாம். தவறான பாதையில் பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டு பின் வருந்தும் பெற்றோர்களே இங்கு அதிகம். மாணவன் எங்கு செல்கிறான், யாருடன் பழகுகிறான் என்பதை கவனிக்க மறக்கின்றனர்.பிறகு மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்களிடம் வந்து புலம்பித் தவிக்கின்றனர் பெற்றோர்கள். என் பிள்ளை சொன்ன பேச்சை கேட்க மறுக்கிறான் நீங்களாவது அவனைத் திருத்துங்கள் என்றுகூறி தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். ஆசிரியர்கள் சில வேளைகளில் கண்டித்தால் அதே பெற்றோர் ஆசிரியர்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இதனால் ஆசிரியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. சில பெற்றோர் மாணவர்களின் முன்பாகவே ஆசிரியர்களை திட்டும் அவல அடையும் நிலையும் காணப்படுகிறது. இக்காரணத்தால் மாணவன் ஆசிரியரை ஏளனமாக பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறான். ஆசிரியர்களுக்கு அவமானமே மிஞ்சுகிறது.

இச்சிக்கல்களுக்கு தீர்வு :

மாணவர்கள், ஆசிரியர்களிடையே மரியாதையோடு கலந்த அன்புறவு நிலவ வேண்டும். வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாணவர்களை தன் பிள்ளைபோல ஆசிரியரும், மாணவர்கள் ஆசிரியர்களை தன் தாயைப் போலவும் கருதுதல் வேண்டும். தன் பிள்ளைக்கு ஒரு அவமானம் என்றால் துடிக்கும் பெற்றோரைப் போல ஆசிரியர்கள் மாற வேண்டும். மாணவச் சமுதாயம், நம்முடைய வளர்ச்சிக்குதான் ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர் என்பதை மனதளவில் உணர வேண்டும். மாணவர்களின் தேவைகள் இன்னது என்பதை அறிந்து ஆசிரியர்கள் செயல்படவேண்டும். கூண்டுக்கிளிகளாக அடைக்காமல் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தைக் கொடுத்து சிறந்த வழிகாட்டுதல்கள் புரிய வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாகப் , பொறுமையாக பிற மாணவர்கள் முன்பு வெளிப்படுத்தாமல் தனிமையில் கூறுவது சாலச் சிறந்தது. மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பது நல்லாசிரியரின் கடமை.

கற்கை நன்றே, கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே
என்பதற்கேற்க கல்வியை பிறரிடம் இரந்தாவது கற்க வேண்டும் அத்தகைய கல்வியைப் புகட்டும் ஆசிரியப் பணிக்கு சிறந்ததொரு நிலையை மாணவச் சமுதாயம் அளிக்க வேண்டும். ஆசிரியப் பணியின் மூலமாக உலகில் உள்ள அறியாமை இருளை அகற்றி சிறந்த மாணவச் சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களுடன் மாணவர்களும், பெற்றோரும், நிர்வாகமும் கைகோர்த்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் இப்பணி மென்மேலும் சிறக்கும்.

Source : facebook.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி