மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அன்றும்- இன்றும்: தமிழர் வரலாறு!

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அன்றும்- இன்றும்: தமிழர் வரலாறு!


கி.பி. 1623 – லிருந்து 1659 வரை மதுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த திருமலை நாயக்கரால் இந்த அரண்மனை எழுப்பப்பட்டது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே. இந்த அரண்மனையைத் திருமலை மன்னர் 1636-ல் கட்டி முடித்தார். இந்த அரண்மனையிலே தம்முடைய 75ஆம் வயது வரை தமது மனைவியருடன் மன்னர் வசித்தார்.

திருமலை மன்னர் இந்த அரண்மனையைக் கட்டியபோது, இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையின் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் இன்றும் உள்ளன. இங்கு சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்று இரண்டு முக்கியப் பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டு வித இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பல்லக்கு முதலியவை வைக்கும் இடம், பூசை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, உறவினர்களும் பணி செய்பவர்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள், சுற்று மதிற்சுவர் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும், இவரின் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வசித்தனர்.

இப்போது நாம் காண்பதற்கு எஞ்சி உள்ள பகுதியே சொர்க்க விலாசம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் முதலில் வைக்கப்பட்டது அல்ல. அரண்மனையின் நுழைவாயில் இவ்வரண்மனையின் வடக்கில் இருந்தது. அரண்மனையின் கிழக்குப் புறத்தில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது வடபுறச் சிகரத்தில் ஒரு கடிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

அரண்மனை முற்றம்:

இந்த பிரம்மாண்டமான அரண்மனைக்குள் நுழைந்ததும் நாம் காண்பது முற்றப் பகுதியாகும். உள்ளே நுழைந்ததும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றியும் வானுயர நிற்கும் தூண்கள் தாங்கிய கட்டிடமும் உள்ளன. மேற்கில் பல வேலைப்பாடுகளுடன் அமைந்த ஒரு கட்டிடப் பகுதி உள்ளது. முற்றத்தின் வடக்கிலும், தெற்கிலும், நடுவில் சாலை வடிவமான மிக உயர்ந்த கட்டிடப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகள் முன்பு பொன்னால் செய்யப்பட்டிருந்தன.

சொர்க்க விலாசம்: 

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்தபகுதியை அடையலாம். இதுவே சொர்க்க விலாசம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த வேலைப்பாடுகளும், குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் (விமானம் – அரண்மனையின் மேல் தளத்தில் உள்ள அழகிய சிலைகளும்,ஓவியங்களும் நிறைந்த பகுதி) கலைத்திறனின் எடுத்துக்காட்டுக்கள். பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுபவை. இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும் அதன் மேல் குவிந்து உயர உயரச் செல்லும் விமானமும், நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமே என்னும் வியப்பைத் தோற்றுவிக்கின்றன. ஆதலால் தான் இதைச் சொர்க்க விலாசம் என்று மன்னன் அழைத்து மகிழ்ந்திருந்தான். இதன் மேலிருந்த ஸ்தூபிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. இவ்விடத்தின் கல் பீடத்தின் மேல் யானைத் தந்தத்தினால் ஆன நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு சாலை (மண்டபம்) வைக்கப்பட்டிருந்தது. இதன் நடுவில் ரத்தினங்களால் செய்யப்பட அரியணை இருந்தது. அதன் மீது அமர்ந்து தான் திருமலை மன்னன் செங்கோல் ஆட்சி புரிந்தான்.

அந்தப்புரம்:

சொர்க்க விலாசத்தின் மேற்கில் அந்தப்புரம் இருந்தது. தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச தேவியும், பிற பெண்களும் இசையும், இலக்கியமும் கேட்டு மகிழ்வர். இதன் தென்மேற்கில் மூலையில் அரண்மனையின் மேலே செல்லப் படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதியாக இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றி வரும் போது, கீழிருந்து மக்கள் இவர்களைக் கண்டு வணங்குவது வழக்கம்.

நாடக சாலை:

சொர்க்க விலாசத்தின் வடமேற்கில், கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைப் போல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடக சாலை என்று அழைக்கப்படுகிறது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தனது பெண்களுடன், உற்றார், உறவினர்களுடன் இங்கு அமர்ந்து நாட்டிய மகளிர் ஆடும் பல கூத்துகளை தீப்பந்த வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.

இப்படி இருந்த நாடக சாலையை இன்று தொல்லியல் துறையினர் அருட்காட்சியகப் பகுதியாக மாற்றியுள்ளனர். இந்த இடத்தைக் காண்பதே கண்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பது உறுதி. இந்த அருங்காட்சியகத்திற்க்குள் 1798 –ல் இம்மகாலின் தோற்ற ஓவியம், 19-ம் நூற்றாண்டில் அரண்மனை நுழைவு வாயிலின் தோற்ற ஓவியம், அரண்மனை மாடங்களின் பழைய தோற்ற ஓவியம், சித்தன்ன வாசல் குகை ஓவியம், சோழர்கால ஓவியம், விஜய நகரப் பேரரசுவின் ஓவியம், சுதையினால் செய்யப்பட மனித உருவச் சிலைகள் எனப் பல உள்ளன.

மேலும் இந்த நாடக சாலைக்குள் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நரசிம்மர், திருமால், பூதேவி கற்சிலைகளும் சிதைந்த நிலையில் உள்ளன. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி சிலையும், 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால், சிவன் சிலையும், 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி சிலைகள் உள்ளன. தவிர பற்பல ஊர்களில் அகழ்வாராய்ச்சியின் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட பல்வேறு சிலைகளின் அணிவகுப்புகள் இந்த அரங்கத்தில் உள்ளன.

இதில் குறிப்பாக திருவாதவூரிலிருந்து நான்முகன் கற்சிலை (12ம் நூற்றாண்டு) திருப்பராய்த்துறையிலிருந்து புத்தர் சிலை (10ம் நூற்றாண்டு), புலியூரிலிருந்து பார்சுவநாதர் சிலை (10ம் நூற்றாண்டு) வடக்கம்பட்டியிலிருந்து சமணத் துறவி சிலை (10ம் நூற்றாண்டு) திருவிடை மருநூரிலிருந்து கங்காள மூர்த்தி சிலை (10 ம் நூற்றாண்டு) கீழ்மாத்தூரிலிருந்து பைரவர் சிலை (10ம் நூற்றாண்டு ) சிதம்பரநாத புரத்திலிருந்து சரஸ்வதி சிலை ( 12ம் நூற்றாண்டு) விளாத்திகுளத்திலிருந்து இயக்கி சிலை (பெண்துறவி) 12- ம் நூற்றாண்டு, திருவரங்கம் பாடியிலிருந்து கௌமாரி சிலை (10ம் நூற்றாண்டு), பதினெட்டாங்குடியிலிருந்து ஆறுமுகம் சிலை (13ம் நூற்றாண்டு), நாங்குநேரியிலிருந்து வைகுண்ட நாதர் சிலை (12ம் நூற்றாண்டு), திருவிடைமருதூரிலிருந்து நடமிடும் பூதச்சிலை (12ம் நூற்றாண்டு), எனப் பல ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்சிலைகள் பல சிதைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் மண்ணால் செய்யப்பட பெரும் தாழிகள் உள்ளன. இது கிராமத்தில் குலுக்கை என அழைக்கப்படுகிறது. (குலுக்கை – நவதானியங்கள் கொட்டி வைக்கப்படும் மண்ணால் செய்யப்பட்ட மண் குடுவை) சங்ககாலக் கலயங்கள், சங்ககாலச் செங்கற்கள், பெருங்கற்கால மட்கலங்கள், கோவலன் காலப் பாத்திரங்கள், துவரிமானிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய கற்கால கருவிகள், தூண்கள், கலைக் கருவிகள் எனப் பல உள்ளன.

இரங்க விலாசம்: 

இந்த அரண்மனையின் வடக்கில் ஒரு சந்துத்தெருவில் பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் ஒரு பகுதியாகும். இதன் மேற்கில் தான் ரங்க விலாசம் இருந்தது. சொர்க்க விலாசம் போல் இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதற்கு மேற்கில் சந்திரிகை மேடை என்னும் ஒரு கட்டிடம் இருந்தது. இவற்றின் வடக்கில் தெற்கு மாசி வீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு காவல் வீரர்கள் இருந்தனர். பல பரிச்சின்னங்களும், ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

சுற்றுமதில்:

இவை அனைத்தையும் சுற்றி ஒரு மதில் இருந்தது. இதைப் பாரிமதில் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சி இருந்த இம்மதில் 900 அடி நீளமும், 660 அடி அகலமும், 40 அடி உயரமும் இருந்ததாம். மிகவும் அபாய நிலையில் இருந்ததால் 1837 ல் இடித்துத் தள்ளப்பட்டதாம். இம்மதிலுக்கு வெளியில் மேற்கில் மலர் வனங்கள் இருந்தன. இவற்றின் நடுவே ஒரு கட்டிடம் இருந்தது. அதில் திருமலை மன்னன் மனைவியருடன் தங்குவது வழக்கமாம்.

அரண்மனை பிழைத்தது:

எழில் வாய்ந்த இந்த அரண்மனையின் பகுதியை திருமலை மன்னரின் பேரனான சொக்கநாத நாயக்கர் என்ற மன்னனே இடித்தான். மதுரையிலிருந்து திருச்சிக்கு அவன் தலைநகரை மாற்றிய போது இங்கிருந்து இடித்த பொருள்களை திருச்சிக்கு எடுத்துச் சென்று அங்கு ஒரு அரண்மனை எடுக்க முயன்றான். அவன் முயற்சியில் வெற்றி பெறவில்லை. சென்ற நூற்றாண்டில் கூட இடிந்த சில பகுதிகள் நின்று கொண்டிருந்தன. காலப் போக்கில் பல பகுதிகள் அழிந்து விட்டன.

கி.பி. 1857 – லிலேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்க விலாசத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டிருந்தன. கி.பி. 1858 –ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதமும் ஏற்பட்டது. 1858-ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதமும் ஏற்பட்டது. 1868- ல் சென்னை கவர்னராக இருந்த லார்டு நேப்பியர் என்பவர் இவ்வரண்மனையின் அழகைக் கண்டு இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க வகை செய்தார். 1872 க்குள்ளாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் இந்த அரண்மனை பழுது பார்க்கப்பட்டது. அதில் இடிந்த சில பகுதிகள் கட்டப்பட்டன. மேலே விரிசல் கண்ட பகுதிகளில் இரும்புக் கம்பிகள் போட்டு முறுக்கப்பட்டன. சுதை வேலைகள் பழுது பார்க்கப்பட்டன. வண்ணங்கள் ஓரளவிற்கு முன்பு போல் தீட்டப்பட்டன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்த அரண்மனையின் அழகையும், தொன்மையையும் இப்பொழுது காத்து வருகிறது.

தற்போதைய நிலை:

இந்த அரண்மனை முழுக்கத் தற்போது புறாக்கள் தங்கும் கூடாரமாக மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் புறாக்களின் எச்சத்தின் மீது நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு தூண்களுக்கு கீழும் நடைபாதைகளிலும் மண் தூசுகள் படிந்த நிலையில் உள்ளன. பகல் நேரத்தில் திறந்து வைக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று நாடக சாலையையும், அருங்காட்சியகமும் பார்க்கும் போது ஏதோ பாழடைந்த இருட்டு அறைக்குள் செல்வது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது. சூரிய வெளிச்சம் கூட சரியாகப் படாத இந்த இருட்டு அருங்காட்சியகத்திற்குள் ஆங்காங்கே விளக்கு இருந்தால் எல்லாப் பொருட்களையும் கண்டு களிக்க நன்கு வசதியாக இருந்திருக்கும்.

பிரம்மாண்டமாக நிற்கும் தூண்களுக்கு நடுவே உள்ள நடைபாதைகளில் தூசுகள் படிந்திருந்தாலும், சில தூண்கள் மறைவில் ஜோடியாக அமர்ந்து கொஞ்சும் காதலர்கள் பலரைக் காண முடிந்தது. சுற்றிப் பார்க்க வருபவரைக் கண்டதும் மறைந்து தூண்களுக்கு பின்னால் மறைவதையும் காண முடிந்தது. மேலும் பிரம்மாண்டமாக வானுயர நிற்கும் அழகிய வெள்ளை நிறத்தூண்கள் அனைத்திலும், வந்த, வந்து சென்ற காதலர்களின் பெயர்களும், கவிதைகளும் கண்டபடி கிறுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவ்வாறு இங்கு கிறுக்காத தூண்களே இல்லை எனலாம். இது ஒருபுறமிருக்க 10ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு உள்ளே வந்து நிம்மதியாகத் தூங்கிச் செல்லும் ஆட்களையும் காண முடிந்தது. இவைகள் ரசிக்க வருபவர்களும் இடையூறாகவும் இருந்தது.

சுற்றிப்பார்க்க வரும் நபர்கள், இதுபோல அரண்மனையின் அழகைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடாமல், வருபவர்களுக்கு இடையூறு ஏதும் செய்யாமல் இருந்தாலே போதும். அது காலத்தை வென்று கம்பீரமாக நிற்கும் இந்த அரண்மனையைக் காப்பதற்காகச் செய்யும் பெருந்தொண்டாகும். கலைநயமிக்க இந்தப் படைப்பை காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


நன்றி : facebook.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி