எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

புதுடில்லி : இன்றைய அவசர உலகில் வங்கிகளுக்கு சென்று வங்கி இருப்புக்களை சரிபார்க்க பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகள், எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை அறிந்து கொள்ளும் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் இதற்காக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை விதித்து, தாங்களாகவே வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றன.

வங்கிகளின் வசூல் :

எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கின்றன. இவைகள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தும் போதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. இதே சேவையை வழங்க கனரா வங்கி ரூ.100 ‌மேல் வசூலிக்கிறது. ஆனால் ஹச்.டி.எப்.சி., வங்கி கூறுகையில், காசோலைகள் செல்லுபடியாகல் இருப்பது, சம்பளம் தொகை வரவாகும் போது, வங்கியின் இருப்பு தொகை குறைந்தபட்ச அளவை விட குறைவது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்காக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி ஆகியன வங்கி கணக்கில் பற்று வைக்கும் போது மட்டுமே எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.

சிதம்பரம் தகவல் :

நேற்று பார்லிமென்ட் அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 5 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., சேவைக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மாநில வங்கிகள் மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹச்.டி.எப்.சி., உள்ளிட்ட தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களின் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தங்கள் வசதிக்கேற்க கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் சிதம்பரம் கூறுகையில், 2010-11ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ., வங்கி ரூ.1 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ்., கட்டண வசூல் மூலம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று விஜயா வங்கி ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது போன்ற வங்கிகளின் கட்டண வசூலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் சேவை :

பெரும்பாலான வங்கிகள் தாங்கள் வழங்கும் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு வசூலிக்கும் சேவை கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த ஆண்டு தான் கட்டண வசூலை துவக்கி உள்ளன. மக்களின் நேரமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிகள் செய்து வரும் இந்த கொள்ளை வசூலை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கையோ, பதிலோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் செய்யும் பண பறிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தர அனைத்து வங்கிகளையும் 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.

சில தனியார்துறை வங்கிகள் இது போன்ற வங்கி கணக்கு விபரம் குறித்த மொத்தமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி விட்டு, எஸ்.எம்.எஸ்., ஒன்றிற்கு தலா 2 பைசா முதல் 20 பைசா வரை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இத்தகைய சேவைக்காக வங்கி மூலம் பணம் எடுக்கப்படுவதை அறியாமலேயே, வங்கியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை அலட்சியம் செய்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி