ஆசிரியர் தகுதித்தேர்வு, அவசியம் தேவை-தினத்தந்தி தலையங்கம்

ஒரு சமுதாயத்தை சீர்மிகு சமுதாயமாக உருவாக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், அந்த சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும்தான் இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து, 3 வயது வரைதான் பெற்றோர்களின் முழு பராமரிப்பிலும், அவர்களது வழிகாட்டுதலிலும் இருக்கிறது. அதன்பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் அந்த குழந்தையின் நல்வாழ்வில் ஆசிரியர்களின் பங்குதான் அதிகம். படித்து முடித்து, நல்லதொரு எதிர்காலத்தை தேடும் வரையில், அந்த மாணவனை உருவாக்குவது ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. களிமண்ணை பிசைந்து, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட மட்பாண்டங்களாக உருவாக்கும் குயவனைப்போல, மாணவனை வளமான எதிர்காலத்தின் வாசலுக்கு கொண்டுசெல்லும் வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். ஆசிரியர்களுடைய அறிவின் பிரதிபலிப்புதான் மாணவர்கள் மீது விழும். எனவே, கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் அறிவாற்றலிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

அந்தவகையில்தான், மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஏழ்மை என்பது அவர்களின் கல்விப்பாதையில் ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்ற வகையிலும், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மத்திய அரசாங்கம் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23–ந் தேதி முதல் அமலுக்கு கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் மூலம், ஏழை–எளிய மாணவன்கூட, பணக்கார மாணவர்கள் படிக்கும் பெரிய பள்ளிக்கூடங்களில் படிக்க முடிகிறது. மாணவர்களுக்கு கல்வி செல்வத்தை வாரிவழங்கும் வள்ளலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வையும் இந்த சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு தகுதி இல்லாத கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அதாவது, பி.எட். பட்டப்படிப்பை படிக்காதவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நியமனத்தை எதிர்த்து, தமிழ்நாடு கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது. பல கட்டங்களில் நீதியின் நீண்ட பயணங்களை தோல்வியால் சந்தித்த இந்த 650 ஆசிரியர்களும், தற்போது வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் உரிய தகுதி இல்லாமல் யாரும் ஆசிரியர் பணியில் சேரமுடியாது.

கடந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் நடத்தும் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிக்கூடங்களில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்காக நாடு முழுவதும் தகுதித் தேர்வு நடந்தது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அடுத்து, தமிழ்நாட்டில் வருகிற 17, 18–ந் தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க இருக்கிறது. 2010–ம் ஆண்டு ஆகஸ்டு 23–ந் தேதிக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த, அல்லது அதற்கு முன்பு பணி நியமன நடைமுறைகளை தொடங்கிய ஆசிரியர்கள் இந்த தகுதித் தேர்வை எழுதவேண்டிய அவசியமில்லை. மற்றபடி இந்தகாலத்துக்கு பிறகு வேலையில் சேர்ந்த ஆசிரியர்களும், இனிமேல் ஆசிரியர் வேலையை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசு உதவிபெறாத பள்ளிக்கூடங்களில் பெற விரும்பும் ஆசிரியர்கள் எல்லாம், தகுதித் தேர்வில் தேர்வு பெற்றிருக்கவேண்டும். முதல் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க விரும்பும் அனைத்து ஆசிரியர்களும், குறைந்த பட்சம் 60 சதவீத மார்க் பெற்று, இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

எனவே, இப்போதெல்லாம் மாணவன் தேர்வுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறானோ?, அதைவிட, அவனுக்கு கற்றுக்கொடுக்கப்போகும் ஆசிரியர்கள், தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக, தகுதித்தேர்வை எழுதுவதற்காக, ஆழமாக படிப்பதை பார்க்கும்போது, நிச்சயமாக எதிர்கால மாணவர் சமுதாயம் ஒளிமிகுந்த வாழ்க்கையை காணப்போகிறது, அவர்களின் அறிவாற்றல் மேம்பட போகிறது. ஒரு மாணவனின் வாழ்க்கை பாதையை நிர்ணயிப்பதே, முதல் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரைதான். அந்த பருவத்தில் அவனுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்பட்டு, கல்வியில் சிறந்து விளங்கிவிட்டால், எதிர்காலம் அவன் பின்னால் தானாக வரும் என்பார்கள். அதை உறுதிப்படுத்தும் மாணவர் சமுதாயத்தை உருவாக்க, அறிவு மேன்மையில் ஆதிக்கம் செலுத்தும் ஆசிரியர்களை சமுதாயத்துக்கு தரும் இந்த ‘ஆசிரியர் தகுதித்தேர்வு’ வரவேற்புக்குரியதே!.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி