2 மாதங்களுக்குள் 652 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.முத்துராமன் நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.2012 அன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால், பள்ளிக் கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஹேமா சம்பத், வழக்குரைஞர் சி.உமா, அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், அரசு சிறப்பு வழக்குரைஞர் வி.எம்.வேலுமணி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காலியாகவுள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், கடந்த 6.12.2007 மற்றும் 2.3.2009 ஆகிய தேதிகளில் மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த அரசாணைகளின் படியும் இந்த பணி நியமனம் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக அரசுக்கு தேவைப்படும் கால அவகாசம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தபோது பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இந்த பணி நியமன நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
எனினும் மனுதாரர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கணினி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஏற்கெனவே 845 பட்டதாரிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்து விட்டதாகவும், ஆகவே மீண்டும் இன்னொரு முறை தேர்வு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும், எப்படியாயினும் பணி நியமன நடவடிக்கைகளை முடிப்பதற்கு 6 மாதங்கள் தேவைப்படாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட்து.
எனினும் 6 மாத காலம் தேவை என்று கோரி அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். விதிகளின்படி 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் மாநிலமெங்கும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியானவர்கள் சுமார் 3500 பேரின் பட்டியலைப் பெற்று, அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்க வேண்டும். ஆக, இப் பணிகளை முடிக்க 6 மாத கால அவகாசம் என்பது அவசியம் என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை 6 மாத காலம் வரை நீட்டிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்றும், எனவே பணி நியமன நடவடிக்கைகளை 2 மாதங்களுக்குள் அரசு முடித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதற்குள் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கை அறிக்கையை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி