பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்

பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இ.தேவபிரசாத் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ரேங்க் பட்டியலை உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் இன்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 32 மாணவ, மாணவியர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண்ணை 88 மாணவர்கள் பெற்றிருந்தனர். ரேங்க் பட்டியலை வெளியிட்ட பிறகு, நிருபர்களிடம் டி.எஸ்.ஸ்ரீதர் கூறியது: இந்த ஆண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது. பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,006 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 1 லட்சத்து 75 ஆயிரத்து 65 பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களாக உள்ளனர். அவர்களை தர வரிசைப் படுத்தி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் http://www.annauniv.edu/tnea2012/ விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால், அவர்களது ரேங்க் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். கடந்த ஆண்டை விட சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு பங்கேற்கின்றனர். மொத்தம் 504 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 417 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெறும். விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டிற்கு ஜூலை 5-ம் தேதியும், தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 7 முதல் 11 வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 12-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். பி.ஆர்க். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூலை 22-ம் தேதி தனியாக கலந்தாய்வு நடைபெறும் என்றார் அவர்.பொறியியல் கலந்தாய்வில் முதல் 10 ரேங்க் பெற்ற மாணவர்கள் விவரம் 1. இ.தேவபிரசாத் - தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம். 2. கே.சிவகுமார் - வேலூர். 3. ஆர்.கெளதம் - திருச்சி. 4. பி.அசோக்குமார் - கோவை. 5. எஸ்.ஐஸ்வர்யா - நாமக்கல். 6. என்.சரவணன் - திருச்சி. 7. ஆஷிஷ் ராஜேஷ் - சென்னை. 8. வி.எஸ்.பெர்மியோ - நாகர்கோயில். 9. எஸ்.அஷ்வின் குமார் - கோவை. 10. பி.சரண்குமார் - பரமக்குடி. இந்த மாணவர்கள் அனைவரும் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல், 4-வது விருப்பப் பாடம் (உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகியப் பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிறந்த தேதியின் அடிப்படையிலும் இவர்கள் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர். பிறந்த தேதியில் மூத்தவர்களுக்கு ரேங்க் பட்டி்யலில் முன்னுரிமை வழங்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருந்தால், ரேண்டம் அண் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும். ரேண்டம் எண்ணில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி